• Welcome to TamilsGuide
செய்திகள் 1

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம் - மயிலிட்டி மக்களுக்கு காணி உரிமை இயக்கம் பூரண ஆதரவு

இலங்கை

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது சொந்தக் காணிகள் 36 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாததைக் கண்டித்து மயிலிட்டி மக்கள் நாளை (15) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இப்போராட்டத்திற்குத் தங்களது ‘காணி உரிமைக்கான மக்கள் இயக்கம்’ பூரண ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த ஆதரவை வெளியிட்டதுடன், அனைத்துப் பொது அமைப்புகளையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மட்டுமன்றி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த டிசம்பர் 1984 இல் இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணிகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சுமார் 42 வருடங்களாகத் தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஜூன் 1990 அன்று மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், இன்றுவரை (37-ஆவது வருடமாக) நாட்டின் பல பகுதிகளிலும், புலம்பெயர்ந்தும் தங்களது சொந்த நிலங்களில் வாழ முடியாமல் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

வடக்கே பெருமளவிலான தனியார் காணிகளை முப்படைகளும் இன்றும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. குறிப்பாக, வயாவிளான் பகுதியில் மக்களின் காணிக்குள் தற்போதும் பாரிய இராணுவ மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

தற்போதைய அரசாங்கம் கடந்து வந்த மூன்று தேர்தல்களிலும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது மற்றும் மக்களின் காணிகளை உடனடியாக ஒப்படைப்பது போன்ற வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு இன்றுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ‘கலைமகள் வித்யாலயம்’ பாடசாலை இப்போதும் இராணுவ முகாமிற்குள்ளேயே இயங்கி வருகிறது. மேலும் இரண்டு பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கு நேரே இயங்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது என ஊடக சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் சுட்டிக்காட்டினார் .

யாழ்ப்பாணம் மட்டுமன்றி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த டிசம்பர் 1984 இல் இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணிகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சுமார் 42 வருடங்களாகத் தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

“நாட்டில் போர் முடிந்துவிட்டது என்று கூறும் அரசாங்கம், ஏன் மக்களின் காணிகளை இன்னும் விடுவிக்கவில்லை என்று புரியவில்லை. அரசாங்கம் உடனடியாக மக்களின் காணிகளில் இருந்து வெளியேறி, அதனை உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எமது இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.

எனவே, மயிலிட்டி மக்களால் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நடத்தப்படவிருக்கின்ற போராட்டத்திற்கு எமது இயக்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும். மக்களின் நலன்களுக்காகவும், காணி விடுவிப்புக்காகவும் குரல்கொடுத்து வரும் அனைத்துப் பொது அமைப்புகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும்” என இரத்தினசிங்கம் முரளிதரன் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Leave a Reply