தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் - அமெரிக்கா புதிய கட்டுப்பாடு
இலங்கை
அமெரிக்காவுக்குள் தற்காலிக விசாக்கள் மூலம் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அங்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிக் சென்றே விண்ணப்பிக்க வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய சட்டப்பூர்வ குடிவரவு முறைமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கவும், நீண்ட காலக் குடியுரிமைக்கான வழிகளை முடக்கவும் மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
அதேவேளை கடந்த வருடம், சில மாணவர்கள் கலாசாரப் பரிமாற்ற வருகையாளர்கள், ஊடகவியலாளர்களின் விசா காலத்தை ட்ரம்ப் நிர்வாகம் குறைத்திருந்ததோடு, ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தற்போது வரை 100,000 இற்கும் அதிக விசாக்களை வெளியுறவுத்துறை இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















