• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் - அரசாங்கத்தை சாடும் சஜித் பிரேமதாச

இலங்கை

கடந்த தேர்தல் காலத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக சிற்றூந்துகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கம், இன்று வாகனங்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

திஸ்ஸமஹாராம பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பால் வாகன விலைகள் அதிகரிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் கூறுவது வேடிக்கையானதாகும் என தெரிவித்த அவர், மக்களின் தரப்பிலிருந்து பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த வரி முடிவின் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும் அதன் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், இதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ஏற்றுமதி வருமானம் அதிகரித்தல், சுற்றுலாத்துறை மேம்பாடு, வெளிநாட்டு பணப்பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார தீர்மானங்களே தற்போதைய நெருக்கடியின் காரணம் என குற்றம்சாட்டிய அவர், மக்களின் அத்தியாவசிய மானியங்களை குறைக்காமல், அவற்றை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 

Leave a Reply