மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை
இலங்கை
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு, குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அவரை ரூ. 25,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 200,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் மூலம் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்யவும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக வாகனத்தைப் பொருத்த வசதியாக, ஒரு கெப் ரக வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை மாற்றுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து, நிறைச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வாகனத்திற்கு ‘E’ பிரிவு இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள உதவியமை, செஸி திருத்த ஆவணத்தை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை மற்றும் பொய்யான தகவல்களை வழங்கி அந்த வாகனத்தைப் போலியான முறையில் பொருத்துவதற்கு துணையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் கமல் அமரசிங்க மீது சுமத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, கடந்த 27 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார்.இதேவேளை, குறித்த சந்தேக நபர் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
























