லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - பெண் கைது
லண்டனின் மத்திய பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 18 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய லண்டனின் வெஸ்மில்டன் (Westminster) பகுதியில் உள்ள ஹார்ஸ்பெரி வீதியில் (Horseferry Road) அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று முன் தினம்(14) காலை 7:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரசு அலுவலகங்கள், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சேனல் 4 (Channel 4) தலைமையகம் போன்ற முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள பரபரப்பான வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த 18 நாட்களே ஆன அந்தப் பெண் குழந்தை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய பெண் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு குடும்பப் பின்னணியில் (Domestic context) நிகழ்ந்திருப்பதாக விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் நடந்த ‘பீபோடி எஸ்டேட்’ (Peabody Estate) குடியிருப்பில் உள்ள ஜன்னல் ஒன்றின் அருகே தடையவியல் நிபுணர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டதுடன் கிரேட் பீட்டர் வீதி மற்றும் ஹார்ஸ்பெரி வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு வேலிகளை (Cordon) அமைத்து போக்குவரத்தைத் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
























