• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (12) நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயல்முறை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புதிதாக உருவாக்கப்படவுள்ள நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம், நாட்டின் வலுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்புச் செயல்முறையின் போது, ஊழியர்களின் தற்போதைய அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனக் கட்டமைப்பிற்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

இது ஒரு நீண்டகால மற்றும் திட்டமிடப்பட்ட கடினமான செயல்முறை எனக் குறிப்பிட்ட அவர், இந்த மாற்றத்தின் போது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சிறந்த புரிதல் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

இதற்காக முறையான தொடர்பாடல் வழிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஊழியர்கள் மன நிம்மதியுடனும், எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்த நம்பிக்கையுடனும் பணியாற்றுவதற்கான சுதந்திரமான சூழலை உருவாக்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்படாமல் உள்ள நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுப்பற்றுடன் செயற்படுவதன் மூலம் எழும் சவால்களை முறியடிக்க முடியும் என அவர் அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்தின் இந்த மறுசீரமைப்பு மாற்றத்தின் அவசியத்தைத் தாங்களும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த பொறியியலாளர் சங்கப் பிரதிநிதிகள், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.
 

Leave a Reply