இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு - இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்
இலங்கை
இலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா ஏன் மூழ்கடித்தது, பல நபர்களை ஏன் கொன்றது என்று தான் இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (11) தெரிவித்தார்.
மேலும் கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அதை அழிப்பது “மிகவும் வேடிக்கையாக” இருந்தது என்று ஒரு இராணுவ ஜெனரல் தன்னிடம் கூறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2026 நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக கென்டக்கியில் புதன்கிழமை (11) நடந்த தேர்தல் பிரச்சார பாணி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது, ஈரானுடனான அதிகரித்து வரும் மோதலில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைப் பாராட்டிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஈரானிய கப்பல்களைக் கைப்பற்றுவதை விட அவற்றை அழிக்க விரும்புகிறார்கள் என்று கூறியது சர்ச்சையைத் தூண்டியது.
மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு தெஹ்ரானுக்கு எதிராகத் தொடங்கிய போரை அமெரிக்கா ஏற்கனவே திறம்பட வென்றுள்ளதாகவும் ட்ரம்ப் இதன்போது கூறினார்.
கென்டக்கி பிரதிநிதி தோமஸ் மாஸிக்கு அரசியல் ரீதியாக சவால் விடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் போது, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் படைகள், கடற்படை கண்ணிவெடிகள் மூலம் கடல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானிய முயற்சிகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் கூறினார்.
அமெரிக்கப் படைகள் இரண்டு நாட்களுக்குள் 54 ஈரானிய கப்பல்களை அழித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் ட்ரம்ப், கப்பல்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்க கடற்படைக்காக மீண்டும் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக அழிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஒரு இராணுவத் தளபதியுடன் தான் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடலையும் இங்கு நினைவு கூர்ந்தார்.
கப்பல்களைக் கைப்பற்றி அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி கூறினார்.
எனினும், ஒரு மூத்த ஜெனரல் அவற்றை மூழ்கடிப்பது விரும்பத்தக்கது மற்றும் வேடிக்கையானது என்று தன்னிடம் பதிலளித்ததாக ட்ரம்ப் இதன்போது கூறினார்.























