ஐரோப்பிய ஒன்றியம் 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி
ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சின் மது உற்பத்தித் துறைக்கு ஆதரவாக 40 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிக்கிறது. விவசாய ஆணையர் Christophe Hansen, விவசாய கண்காட்சியை (Salon de l’agriculture) முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிக உற்பத்தி காரணமாக சந்தையில் தேங்கியுள்ள மதுவை தொழில்துறை ஆல்கஹாலாக மாற்றும் “distillation de crise” திட்டத்திற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்; இது விலைகளை நிலைநிறுத்த உதவும்.
மேலும், நைட்ரஜன் உரங்களின் இறக்குமதி சுங்க வரிகளை ஒரு ஆண்டுக்கு இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் ரஷ்யா மற்றும் பெலாறஸ் (Belarus) ஆகிய நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகள் இதில் சேராது. உற்பத்தி செலவுகள் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தானிய மற்றும் பிற பயிர் விவசாயிகளுக்கு இது நிவாரணமாக இருக்கும்.
அதே நேரத்தில், Christophe Hansen, Mercosur உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரித்தார். உள்நாட்டு நுகர்வு அதிகரிக்க முடியாத சூழலில், ஐரோப்பிய விவசாய ஏற்றுமதிக்கான புதிய சந்தைகளை தேட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார். ஒப்பந்தத்தை தற்காலிகமாக அமுல்படுத்துவது குறித்து உறுப்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.






















