• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா

இலங்கை

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60ஆவது ஆண்டு விழாவும், 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 02 வரை இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல், அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு தேவையான அரச அனுசரணையை வழங்குவதற்காக ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இந்தக் குழுவில் புத்தசாசன அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் இடம்பெறவுள்ளனர்.

1966ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் 60ஆவது ஆண்டு விழாவை, அது தோற்றம் பெற்ற நாட்டிலேயே நடத்துவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக ஏற்பாட்டுக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டது.

தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் உள்ளிட்ட அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதேவேளை, மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டு தேரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவின் ஆரம்ப நிகழ்வு நவம்பர் 28ஆம் திகதி நாகானந்த பௌத்த பல்கலைக்கழகம், கொழும்பில் நடைபெறும். நவம்பர் 29ஆம் திகதி நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு (Academic Conference) நடைபெறவுள்ளது.

உலக அமைதிக்காக நவம்பர் 30ஆம் திகதி ஜய ஸ்ரீ மகா போதி, அநுராதபுரத்தில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 01ஆம் திகதி ருவன்வெளிசெய்யா மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகிய புனித ஸ்தலங்களை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் நடைபெறவுள்ளன.

“வஸ்” காலம் முடிந்த பின் நடைபெறும் இந்த விழா, இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை உலகிற்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பாக அமைவதுடன், நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நிறைவு விழாவை தேசிய முக்கியத்துவத்துடன் நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.

மேலும், வெளிநாட்டு தேரர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விமான நிலையங்களில் சிறப்பு நுழைவாயில்கள் (VIP வசதிகள்) ஏற்பாடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் விருந்தோம்பலை உலகிற்கு எடுத்துக்காட்டவும், பௌத்த மரபின் பெருமையை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த விழாவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் ருஹுணு பல்கலைக்கழக வேந்தரும், WBSC உப தலைவருமான கலாநிதி வண. அக்குரெட்டியே நந்த நாயக்க தேரர், நாகானந்த பௌத்த பல்கலைக்கழக உபவேந்தரும் விழாக் குழுத் தலைவருமான கலாநிதி வண. போதாகம சந்திம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply