KHxRK ரி-யூனியன் - இயக்குநர் நெல்சனை பாராட்டித்தள்ளிய எஸ்.ஜே. சூர்யா
சினிமா
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பலரும் இந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் குறித்த இயக்குநர் நெல்சனின் X தளப்பதிவுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பதிலளித்துள்ளார்.
இது குறித்த பதிவில் அவர், "ஆஹா, என்ன ஒரு பெருமையான தருணம், இரண்டு வெற்றியாளர்களும் ஒன்றாக நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சி. என்ன ஒரு காட்சி நெல்சன் திலிப் குமார் சார். அனிருத் நீங்கள் எப்போதும் போல் கலக்குகின்றீர்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையான தருணத்தை உருவாக்கியது," என குறிப்பிட்டுள்ளார்.























