மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும்-ஜனாதிபதி
இலங்கை
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த இலங்கையின் நோக்கம் என்பது தனித்து வெற்றியைப் பெறுவது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது நாடு AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார் .எனவே, பின்வரும் 04 அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை இலங்கை முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவானது பொருளாதாரங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான தருணத்தில், புதுடில்லியில் உங்களுடன் இணைந்துகொள்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றத்தக்க சக்தியாக AI தொழில்நுட்பம் விளங்குகின்றது.
எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத்தில் வலுவடைந்துள்ள நாடுகளுக்கும் அத்தகைய வசதியற்ற நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளியானது, பல நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பின்தள்ளப்படும் நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நவீன பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். இதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது என்றும் அவர் கூறினார்
AI தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகம் விவாதித்து வருகிறது. ஆனால் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் கலாசார பொருத்தப்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் கலாசார மதிப்புகள் மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும். உலகத்தரம் வாய்ந்த AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், நமது தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு, தமது மொழி மற்றும் கலாசாரம் மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாகும். அத்தகைய கலாசார பொருத்தப்பாடுகளை அடைய, விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பும் அவசியம். இதன்போது, நமது உள்ளூர் மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்துவதும் முக்கியம். AI இன் பாதகமான விளைவுகளிலிருந்து நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும்.
தனித்து வெற்றியை அடைவது எமது தொலைநோக்குப் பார்வை அன்றி ஒருங்கிணைவதாகும். பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக AI உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பார்க்கிறோம். எனவே, இலங்கை ஒரு பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது. இதன்போது, குறைந்த விலையில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூட்டு திறன் மேம்பாடு ஆகிய 04 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டமைவது மிகவும் முக்கியம் ஆகும் என்றும் குறிப்பிட்டார்
இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அபுதாபி முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா (Lula de Silva) மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.






















