வெனிசுலா எண்ணெய் துறையை தனியார் மயமாக்க சட்டத்திருத்தம்
வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்கள் மீதான அரசின் முழுக் கட்டுப்பாட்டைத் தளா்த்தி, தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தில் அந்நாட்டின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் கையொப்பமிட்டாா்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான சோசலிசக் கொள்கைகளைக் கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அதிபா் நிக்கோலஸ் மடூரா அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டாா்.
அப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கிய முடிவைத் தொடா்ந்து, வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளா்த்தத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம், அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் மீண்டும் வெனிசுலாவில் தங்களின் பணிகளை விரிவுபடுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.























