கனடாவில் பிஸ்தா தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா
பக்டீரியா மாசுபாடு காரணமாக பிஸ்தா மற்றும் பிஸ்தா கலந்த பல பொருட்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய மீள அழைப்பை (recall) மேலும் விரிவாக்கியுள்ளதாக கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட புதுப்பிப்பு அறிவிப்பின்படி, தற்போது 241 தயாரிப்புகள் பல்வேறு பிராண்டுகளில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளன.
ஒன்றாரீயோ, அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, மானிடோபா, நியு பிரவுன்ஸ்விக், நியபவுண்ட்லாந்த், நோவா ஸ்கோஷியா மற்றும் சஸ்கட்ச்வான் ஆகிய மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தயாரிப்புகள் ஆன்லைனிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
“சால்மொனெல்லா மாசுபட்ட உணவுகள் தோற்றத்திலும் மணத்திலும் கெட்டதாகத் தெரியாமல் இருக்கலாம்; இருந்தாலும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்,” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் பிஸ்தா தொடர்பான மீள அழைப்புகள் தொடங்கப்பட்டு, உணவு பாதுகாப்பு விசாரணை முன்னேறியதுடன் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகிறது.
மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 155 சால்மொனெல்லா தொற்றுகள் பதிவாகியுள்ளன; இதில் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு, ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்தா தொடர்பாக 160-க்கும் மேற்பட்ட மீள அழைப்புகள் இருப்பதாக கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் தெரிவித்திருந்தது.























