நான் இவ்ளோ சாதனை செய்தும் அவள் ஏன் என்னை பார்க்க வரவில்லை? தனது முதல் காதலி பற்றி பிரபல நடிகரிடம் புலம்பிய ரஜினி!
சினிமா
வாழ்க்கைப் பயணத்தில் எங்கோ மறைந்துபோன அந்தக் காதலியை, ஒவ்வொரு கூட்டத்திலும் தனது கண்கள் தேடும் என்று ரஜினிகாந்தே ஒருமுறை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
பஸ் கண்டக்டராக இருந்த ஒரு இளைஞர், தமிழ்த் திரையுலகின் தலைவர் ஆக மாறிய ரஜினிகாந்தின் வெற்றிக் கதை ஒரு கனவுப் பயணம் போன்றது. சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற அந்த இளைஞன் பிற்காலத்தில் ரஜினிகாந்தாக மாறிய இந்தக் கதை, பல தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
ரஜினிகாந்தின் திறமையைக் கண்டறிந்து, அவருக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஆதரவு அளித்து, சினிமாவைத் தெரிந்துகொள்ள திரைப்படக் கல்வி நிறுவனத்திற்கு (Film Institute) அனுப்பி வைத்தவர், அவருடைய முதல் காதலியான நிர்மலாதான். ஆனால், ரஜினிகாந்தின் சினிமா கனவுகளுக்குச் சிறகுகள் அளித்த அந்தக் காதலியைப் பிறகு அவர் சந்திக்கவே இல்லை என்பது காலத்தின் விசித்திரமான விதி.
வாழ்க்கைப் பயணத்தில் எங்கோ மறைந்துபோன அந்தக் காதலியை, ஒவ்வொரு கூட்டத்திலும் தனது கண்கள் தேடும் என்று ரஜினிகாந்தே ஒருமுறை வெளிப்படையாகக் கூறியிருந்தார். பஸ் கண்டக்டராக வேலை பணியாற்றியபோதுதான் ரஜினிகாந்த், எம்.பி.பி.எஸ். மாணவியான நிர்மலாவை (நிம்மி) சந்தித்தார். குறுகிய காலத்திலேயே இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் நடித்த ஒரு நாடகத்தைப் பார்த்த நிர்மலா, அவருக்குள் இருந்த அபாரமான நடிப்புத் திறமையை உணர்ந்தார். சரியான பயிற்சி கிடைத்தால், ரஜினிகாந்த் ஒரு மாபெரும் நடிகராக வரக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதைப் புரிந்துகொண்ட நிர்மலா, தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து, அவரை திரைப்படக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க வைத்தார்.
நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள். ஒருநாள் நீங்கள் ஒரு பெரிய நடிகராவீர்கள் என்று எனக்கு நிச்சயம் தெரியும். உங்களை நான் போஸ்டர்களிலும், திரைப்படங்களிலும் காண விரும்புகிறேன்," என்ற வார்த்தைகளுடன் நிர்மலா, ரஜினிகாந்தை அனுப்பி வைத்தார். ஆனால், பெங்களூரை விட்டுப் புறப்பட்ட பிறகு, ரஜினிகாந்துக்கு நிர்மலாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. படிப்பை முடித்துவிட்டு பெங்களூருக்குத் திரும்பிய ரஜினிகாந்த், நிர்மலா வசித்த வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். எவ்வளவு தேடியும், அவரால் நிர்மலாவை மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாபெரும் நடிகராக மாறிய பிறகும், வெற்றியின் உச்சியில் நின்றபோதும், ரஜினிகாந்த் கூட்டத்திற்கு நடுவில் தனது 'நிம்மியை' தேடினார். ஆனால், அவரால் நிம்மியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிர்மலா, ரஜினிகாந்தை சினிமா போஸ்டர்களிலும் பெரிய கட்-அவுட்களிலும் பார்க்க ஆசைப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிர்மலாவின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறின. ரஜினிகாந்துக்கு பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டது மட்டுமல்லாமல், மக்கள் அவருக்காகக் கோவில்களையும் கட்டினர்.
நிர்மலா அவருக்கு ஆசைப்பட்ட அனைத்தும் சூப்பர்ஸ்டாருக்குக் கிடைத்தன. ஆனால், நிர்மலாவை மட்டும் ரஜினிகாந்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் முதல் காதல் குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் கூறிய விஷயங்களை நடிகர் தேவன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். ரஜினிகாந்துடன் 'பாட்ஷா' திரைப்படத்தில் பணியாற்றியபோதுதான் அவர் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசினார். தேவன், ஏன் அவள் என்னைப் பார்க்க வரவில்லை? நான் இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும், அவள் ஏன் என்னைப் பார்க்க விரும்பவில்லை?" என்று ரஜினிகாந்த் தேவனிடம் கேட்டதாகவும், இந்தக் கதையைச் சொல்லும்போது ரஜினிகாந்தின் கண்கள் கலங்கியிருந்தன என்றும் தேவன் குறிப்பிட்டார்.
தேன்மொழி






















