சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்
இலங்கை
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை, பெயலோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவியது.
இதன் காரணமாக 47 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பெயலோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டப் பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழும் அபாயம் காணப்படுவதோடு, மக்களின் குடியிருப்புகள் தாழிறங்கியும், வீடுகளில் பாரிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளமையினால் அத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் தற்காலிகமாகப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சமைத்த உணவுகளை நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் ஆகியவை வழங்கி வருவதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தாம் எங்கு செல்வது எனவும், இதற்கான மாற்று நடவடிக்கையினைச் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஒரே மண்டபத்தில் தங்கியிருப்பதால் தனியுரிமை பாதிக்கப்படுவதாகவும், அங்குச் சுகாதார வசதிகள் முறையாக இல்லை எனவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.






















