• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இங்கிலாந்தில் 200 வீடுகளில் அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் - இரண்டு பேர் கைது

இங்கிலாந்தின் டெர்பி (Derby) நகரத்தில் வெடிபொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, வல்கன் வீதி (Vulcan Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை வெளியேற்றப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெர்பிஷைர் காவல்துறையினர் (Derbyshire Police) ஒரு முகவரியில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் சோதனையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் , 40 மற்றும் 50 வயதுடைய போலந்து நாட்டவர்கள் (Polish nationals) இருவர் வெடிபொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் ரெபேக்கா வெப்ஸ்டர் (Superintendent Rebecca Webster), காவல்துறை “அந்த முகவரியில் இருந்த பொருட்கள் பற்றிய உளவுத் தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்தது” என்று தெரிவித்தார்.

காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் இராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் பிரிவு (Army’s Explosive Ordnance Division) சம்பவ இடத்திற்கு விரைந்தது. அதன் பணியின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை மாலை 4 மணிக்குச் சற்றுப் பிறகு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு (controlled explosion) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சத்தம் கேட்கக்கூடும் என காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. வெளியேற்றம் செய்யப்பட்டவர்கள், தங்கள் வீடுகளுக்கு வெளியே 24 மணி நேரம் இருக்கத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தங்களுக்குத் தேவையான மருந்துகள் அல்லது செல்லப்பிராணிகளை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டெர்பி நகர சபை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தங்குமிடம் (Rest Centre) ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு வேறு எந்தப் பெரிய ஆபத்தும் இல்லை என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியேற்றம் என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் காவல்துறையின் காவலில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.     
 

Leave a Reply