5 ஆண்டுகள் கனடா வாழ்க்கை - சொந்த நாடு திரும்பும் இந்தியர் கூறும் செய்தி
கனடா
ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர், இனியும் கனடாவில் தாக்குப்பிடிக்க முடியாது என இந்தியாவுக்கே திரும்ப முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்ல மக்கள் முடிவு செய்ய காரணங்கள் வேறுபடலாம்.
வெளிநாட்டில் வேலை செய்தால் சற்றே கூடுதல் வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக சொந்த நாட்டைத் துறந்து வெளிநாடு செல்பவர்கள் பலர்.
அவ்வகையில் ஒரு நல்ல வேலைக்காக கனடா சென்ற ஒரு இந்தியர், போதும், இனி கனடாவில் தாக்குப் பிடிக்கமுடியாது என இந்தியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர் கூறும் காரணம், கனடாவில் நான் ஒரு மனிதன் என்ற உணர்வே அற்றுப்போய்விட்டது என்கிறார் அவர்.
நண்பர்கள் இருந்தாலும் தனிமை, வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது, மளிகை வாங்கச் செல்ல வேண்டுமானால் கூட, அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டியிருக்கிறது என்கிறார் அவர்.
இந்தியாவில் என்றால், மளிகைப்பொருட்கள் வாங்குவதற்காக எல்லாம் ஒரு முழு நாளை செலவிடவேண்டியதில்லை. கடைக்குப்போனோமா, பொருளை வாங்கினோமா என்று இருக்கலாம் என்கிறார் அவர்.
மக்கள் இந்தியாவைக் குறித்து மோசமாக பேசலாம். ஆனால், குறைகள் இருந்தாலும் அது என் சொந்த நாடு அல்லவா என்கிறார் அவர்.
சமூக ஊடகம் ஒன்றில் தனது முடிவு குறித்து அவர் இடுகை ஒன்றை வெளியிட, அவரது முடிவுக்கு பலரும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துவருகிறார்கள்.






















