• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் 50 மில்லியன் அபராதம் - அதிரடி காட்டும் அவுஸ்திரேலியா

இலங்கை

ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் டிச. 10ஆம் திகதி முதல் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருகிறது.

முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு டிச., 10ஆம் தேதி முதல் 33 மில்லியன் அமெரிக்க டாலர் (ஆஸ்திரேலிய மதிப்பில் 50 மில்லியன்) அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

முடக்கப்பட்ட கணக்குகளின் விவரங்கள் குறித்து டிச., 11 ஆம் திகதி இந்த 10 சமூக ஊடக நிறுவனங்களிடம் அறிக்கை மூலம் தரவுகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அடுத்த 6 மாதங்களுக்கு மாதாமாதம் அறிக்கை மூலம் தரவுகள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் (Anika Wells),

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயது உறுதிப்பாட்டை நியாயமாகவும் துல்லியமாகவும் அறிய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என்பதை அரசு ஆமோதிக்கிறது.

எனினும், சட்டத்திற்கு புறம்பாக சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது கண்டறியப்பட்டால் அதற்கான அபராதத்தை அவர்கள் சந்திக்க நேரிடும்.

தொடர்ந்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அதிகபட்ச தொகையை அபராதமாக நீதிமன்றமே விதிக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து எந்தநேரத்திலும் வெளியேறலாம் என கூகுள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply