ரஷியாவின் எண்ணெய் நிலையம், வெடிபொருள் தொழிற்சாலை மீது டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். ரஷியா பேச்சுவார்த்தைக்கு இணங்காததால், சண்டை நீடித்து வருகிறது.
தற்போது டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று ரஷியாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை டிரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு ரஷியாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷியப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. கிரீமியாவில் உள்ள எண்ணெய் நிலையத்தையும் டிரோன் தாக்கியதாவும், இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கிரீமியா உள்பட 14 மாகாணத்தில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.
251 டிரோன்கள் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்த ரஷியா, போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.






















