அரசாங்க வங்கியில் மாறிய அடகு நகை மீட்க சென்ற நபருக்கு அதிர்ச்சி
இலங்கை
அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது.
மோதிரங்கள் வேறு நபரிடம் மாறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட வங்கி அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2024 ஜனவரி 30ஆம் திகதி தனதும் தனது மனைவியினதும் மோதிரங்களை அரச வங்கியொன்றில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார். பின்பு ஒரு வருடம் கழித்து அதற்கான வட்டித்தொகையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் செலுத்தியுள்ளார்.
தனது இரு மோதிரங்களையும் மீட்பதற்காக இவ்வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மேற்படி வங்கிக்கு சென்றுள்ளார். மொத்த கொடுப்பனவை செலுத்திய பின்னர் வங்கி அடகு நகை பெட்டகத்திலிருந்து மோதிரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மோதிரங்களை அவதானித்தவர் அதிர்ச்சியடைந்து அவை தான் அடகுவைத்த மோதிரங்கள் அல்ல என ஊழியர்களுக்கு தெரியப்படுத்தினார். அது குறித்து வங்கி அதிகாரியிடம் தெரிவித்ததையடுத்து நிலைமையை உணர்ந்துகொண்ட வங்கி முகாமையாளர் ஒரு வாரம் கழித்து வரும்படியும் மோதிரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து தான் செலுத்திய பணத்தையும் அவர் மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் ஒரு வாரம் கழித்து அவர் சென்றபோதும் அவருக்கு மோதிரங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் அட்டன் பொலிஸ் தலைமை காரியாலயத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக சென்றுள்ளார்.
சம்பவத்தை செவிமடுத்த பொலிஸ் அதிகாரி இது குறித்து வங்கியின் பாதுகாப்பு கமராவை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் முறைப்பாட்டை பதிவு செய்யாமல் இரு நாட்கள் கழித்து மீண்டும் வங்கிக் கிளைக்கு சென்ற போது அவரது மோதிரம் வேறு ஒரு நபருக்கு தவறுதலாக சென்று விட்டதாகவும் அவரை தொடர்பு கொண்டு அதை மீண்டும் கொண்டு வந்து தரும்படி தகவல் அனுப்பியுள்ளதாகவும் வங்கி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தான் அடகுவைத்த இரண்டு மோதிரங்களின் எடை 5.30 கிராம் என்று கூறும் குறித்த நபர், வங்கி முகாமையாளர் ஒரு மோதிரமே அடகு வைக்கப்பட்டதாக ஒரு கட்டத்தில் கூறியதாகவும் இது தொடர்பில் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் மோதிரங்கள் கிடைக்காவிட்டாலும் அதன் எடைக்கேற்ப தற்போதைய சந்தை விலைப் பெறுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் பாதுகாப்பாக இருக்கும் என அரச வங்கியில் அடகு வைத்த நகை மாரிப்போயுள்ள சம்பவம், ஊழிஅயகளின் மெத்தனத்தை காட்டுவதாக பலல்ரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.























