காந்தாரா படத்தின் பின்னால் உள்ள உண்மை சம்பவம் - ரிஷப் ஷெட்டி சொன்ன சீக்ரெட்
சினிமா
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' கடந்த அக்டோபர் 2 வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி, 'காந்தாரா' உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கதையை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத்தில் ஒரு விவசாயிக்கும் வன அதிகாரிக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது. அதை நான் இரண்டு பேருக்கு இடையிலான சண்டையாகப் பார்க்கவில்லை.
அதை இயற்கைக்கும் மனித தேவைகளுக்கும் இடையிலான மோதலாகப் பார்த்தேன். 'காந்தாரா' கதையின் விதை அந்த யோசனையிலிருந்துதான் விதைக்கப்பட்டது. விவசாயத்தைச் சுற்றி நமது கலாச்சாரம் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
காந்தாரா படத்தில் எல்லோரும் கிளைமாக்ஸைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தக் காட்சிகளை நான் கற்பனை செய்து பார்த்தேன். எனக்குப் பின்னால் ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்து அந்தக் காட்சிகளை எழுத வைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
படைப்பு சாமானியர்கள் கூட புரிந்துகொள்ள எளிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் அனைவரையும் சென்றடையும். காந்தாரா மீதான எனது நம்பிக்கை மீண்டும் ஒருமுறை உண்மையாகிவிட்டது" என்று அவர் கூறினார்.























