நடிகர் மோகன்லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்திய கேரள அரசு
சினிமா
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று கூறினார்.
பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.























