ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட நகைச்சுவை நடிகர் சாம்ஸ்
சினிமா
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ்.பாஸ்கர், சந்தானம், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ஏற்று நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.
படத்தின் தொடக்கத்தில் சிறு போர்ஷனில் வந்திருந்தாலும் ஜாவா படித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய மென்பொருள் வல்லுநராக மாறியிருப்பார். 'கலக்குப்பா கலக்கு' என்று சந்தானம் கூறும் டயலாக்கும் பேமஸானது. இதனால் நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் மனதில் ஜாவா சுந்தரேசன் என்றே பதிந்து விட்டார்.
இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.
அவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சாம்ஸ் அவர் திரைவாழ்வில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ஜாவா சுந்தரேசன் என்ற பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது கவனம் பெற்றுள்ளது. செல்லும் இடமெல்லாம் தன்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைப்பதால் அவர் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
























