இந்தோனேசியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது- 65 மாணவர்கள் சிக்கி தவிப்பு
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஒரு பகுதியில் கட்டிட விரிவாக்க பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் மாணவர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தபோது பள்ளி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ராட்சத கான்கிரீட்கள் சரிந்தன. இதன் இடிபாடுகளில் ஏராளமான மாணவர்கள் சிக்கி கொண்டனர்.
உடனே போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். 99 மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலோர் ஆண்கள் ஆவார்கள். கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் 65 மாணவர்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 7 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம். அவர்களை மீட்க போராடி வருகிறோம். உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர்.
இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.
இதற்கிடையே கட்டிடத்தின் 3-ம் மாடியில் கட்டுமான ஊழியர்கள் சிமெண்ட் கலவையை ஊற்றிய பிறகு கட்டிடம் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.























