பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 10 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
























