கனடா உங்களை அன்புடன் வரவேற்கிறது.. H-1B விசாவில் கைவைத்த டிரம்ப் - மார்க் கார்னி பக்கா பிளான்
கனடா
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்தார்.
எச்-1பி விசா பெறுபவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் இக்கட்டண உயர்வால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்தது.
அறிவியல், தொழில்நுட் பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் கே விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்வோம்.
விரைவில் இது குறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம். அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வர தயாராக உள்ளனர்.
கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான சலுகை விரைவில் இருக்கும்" என்று கூறினார்.
கனடா பிரதமர் கார்னி அறிவிப்பின்படி விசா சலுகை அளிக்கப்பட்டால் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான உயர் திறமையான இந்திய நிபுணர்களுக்கு ஒரு தெளிவான மாற்று இடமாக கனடா இருக்கும்.






















