பப்ஜியால் பிடித்த வெறி - தாய், 3 சகோதரகளை கொலை செய்த சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானில் ஆன்லைன் PUBG விளையாட்டில் ஏற்பட்ட வெறியின் உச்சத்தில் தனது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக் கொன்ற 17 வயதுச் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜைன் அலி. 2022 இல் இந்த சம்பவம் நடந்த போது ஜைன் அலிக்கு 14 வயது.
PUBG விளையாட்டில் தீவிரமாக அடிமையாக இருந்த சிறுவன், விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாகத் தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்து வந்தார்.
மேலும், விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
அப்போது ஒரு நாள், பல மணி நேரம் PUBG விளையாடிய ஜைன் அலி, ஒரு இலக்கைத் தவறவிட்டதால் ஆத்திரமடைந்தான். அதேநேரம் தாயாரும் சிறுவனை அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக கண்டிக்கவே அவன் மேலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர் (20), மற்றும் இரண்டு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோர் தூங்கும் சமயத்தில் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றான்.
விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளி ஜைன் அலிக்கு அவனது வயது காரணமாக, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள்) என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.























