முதல் முறையாக பசிபிக் பெருங்கடலில் சீன விமானம் தாங்கிக் கப்பல்கள் - ஜப்பான் கவலை
பசிபிக் பெருங்கடலில் முதல் முறையாக இரண்டு சீன விமானம் தாங்கிக் கப்பல்கள் ஒரே நேரத்தில் காணப்பட்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன விமானம் தாங்கிக் கப்பல் ஷான்டாங் ஜப்பானின் 'பிரத்யேக பொருளாதார மண்டலம்' வழியாகப் பயணித்து, பசிபிக் பெருங்கடலின் வடக்கு நீரில் அதன் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் தரையிறங்கும் மற்றும் புறப்படும் பயிற்சிகளை நடத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்றும், சீனாவிற்கு இதுகுறித்து செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ஹயாஷி, சீனாவின் அதிகரித்து வரும் கடல்சார் நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், விமானம் தாங்கிக் கப்பலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டது என்று கூறினார்.
"எங்கள் தேசியக் கொள்கை இயற்கையில் தற்காப்பு சார்ந்தது. ஜப்பான் அந்த நடவடிக்கைகளைப் புறநிலையாகவும் பகுத்தறிவுடனும் பார்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று லின் கூறினார்.






















