• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெளர்ணமி பண்டிகை- அனுராதபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

இலங்கை

இந்த ஆண்டு பெளர்ணமி பண்டிகைக்கு 1.5 முதல் 2 மில்லியன் பக்தர்கள் அனுராதபுரத்திற்கு வருகை தருவார்கள் என்று தேசிய பொசன் குழுவின் தலைவரும் அனுராதபுரம் மாவட்ட செயலாளருமான ரஞ்சித் விமலசூரிய தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (07) ஏராளமான பக்தர்கள் அனுராதபுரத்திற்கு வந்திருந்தனர்.

பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாத்ரீகர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக அனுராதபுரம் நகரைச் சுற்றி 16 வாகன நிறுத்துமிடங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெளர்ணமி வாரத்தில் அனுராதபுரம் பகுதிக்கு சிறப்பு அனர்த்த உதவித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அவரச மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கை அறையின் “117” என்று துரித அழைப்பு எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், நீர்த்தேக்கங்களுக்கு அருகில் உயிர்காக்கும் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

இதனிடையே, பாதுகாப்பற்ற இடங்களில் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரம், அனுராதபுரத்திற்கு வருகை தரும் போது பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் துறையினர் கேட்டுக் கொள்கின்றனர்.

இதனிடையே, பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவைகள் இன்று (09) முதல் இயக்கப்பட உள்ளன.

இது தவிர பெளர்ணமி யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக அனுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலையை மையமாகக் கொண்டு ஏராளமான தானசாலைகள் (தன்சல்கள்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய பெளர்ணமி விழா நாளை (10) மிஹிந்தலை விகாரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply