இங்கிலாந்து முதல் பெண் எம்.பி. அணிந்திருந்த வைரக்கிரீடம் 10 கோடிக்கு ஏலம்
இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி. நான்சி ஆஸ்டர். அமெரிக்க வம்சாவளியான இவர் 1919-ல் இங்கிலாந்தின் பிளைமவுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
அங்கு மது அருந்தும் வயதை 14-ல் இருந்து 18 ஆக உயர்த்துதல், பெண்களின் வாக்குரிமை வயதை 30-ல் இருந்து 21 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் இவரது பங்கு அளப்பரியது.
எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது கணவர் லார்ட் வால்டோர்ப் ஆஸ்டர் நான்சிக்கு ஒரு கிரீடத்தைப் பரிசாக வழங்கினார். வைரத்தால் செய்யப்பட்ட அந்தக் கிரீடம் காண்போரின் கண்ணை கவரும் வகையில் இன்றும் அழகுடன் மிளிர்கிறது.
இதனை 1931-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் முதன்முறையாக அணிந்திருந்தார். அப்போது பலரது கவனத்தையும் இந்த கிரீடம் ஈர்த்தது.
இந்நிலையில், அவர் அணிந்திருந்த வைர கிரீடத்தை ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.
இதில் நான்சி ஆஸ்டர் அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.























