• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீசை வச்சா இந்திரன்,மீசை இல்லனா சந்திரன்! இயக்குநர் கேபி - ரஜினிகாந்த் கூட்டணியின் தில்லுமுல்லு

சினிமா

ரஜினிகாந்த் என்றொரு நடிகரை அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், அவரையே ஒரு நகைச்சுவை நாயகனாக மாற்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் தில்லு முல்லு.

சிவாஜி ராவ் என்ற இளைஞனின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரை ரஜினிகாந்தாக மாற்றி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாலசந்தார். அதன் பிறகு பாலசந்தர் இயக்கத்தில் சில படங்களில் தொடர்ந்து நடித்த ரஜினிகாந்த், பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். அவ்வப்போது தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமான படங்களிலும் நடித்தார்.

இப்படி ரஜினியின் சினிமா கிராப் சென்றுகொண்டிருக்க, அவரை நகைச்சுவை நாயகனாக மாற்றி ரசிகர்களை வயிறு குலுங்கு சிரிக்க வைத்தவரும் இயக்குநர் கே.பாலசந்தர் தான். தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி படங்களில் டாப் 10 லிஸ்டில், ரஜினிக்காகவே அவர் உருவாக்கிய தில்லு முல்லு கண்டிப்பாக இடம் உண்டு.

இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த கோல்மால் படத்தின் ரீமேக்தான் தில்லு முல்லு என்றாலும், அதை தமிழுக்கு ஏற்றவாரு மாற்றியமைத்ததில் இயக்குநர் பாலசந்தர் உதவியாளர் அனந்து, வசனகர்த்தாவான மறைந்த இயக்குநர் விசுவின் பணி அளப்பரியது.

டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரம் போல் எதிர் துருவங்களை கொண்ட ரஜினிகாந்த் - தேங்காய் சீனிவாசன் காம்போ போட்டி போட்டுக்கொண்டு சரவெடியான டைமிங் வசனங்களால் படம் முழுக்க சிரிக்க வைத்திருப்பார்கள்.

லீவுக்காக பொய் சொல்லி, அந்த பொய்யை நிஜமாக்க வரிசை கட்டி பொய் சொல்வது என பெரும்பாலோனரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் உண்மை ஒட்டி படத்தின் கதைக்களம் அமைந்திருந்ததாலோ என்னவோ படத்தின் காட்சிகள், வசனங்கள் ஆகியவை எளிதில் கனெக்ட் ஆகியது.

மீசை வச்சா சந்திரன், மீசை இல்லனா இந்திரன் என தேங்காய் சீனிவாசனை நம்பவதை்து தில்லு முல்லு செய்யும் ரஜினி, அவரை சமாளிக்க பாடாய் பட்டு நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இதுதான் படத்தின் ஹைலைட் காட்சி என தேர்வு செய்து குறிப்பிடாமல் பிரேமுக்கு பிரேம் காமெடி ஹைலாட்களால் சிரிப்பொலியில் படம் முழுவதும் அதிர வைக்கும் விதமாக இருக்கும்.

குறிப்பாக ரஜினி - தேங்கான் சீனிவாசன் இண்டர்வியூ காட்சி, இருவரும் புட்பால் போட்டி பார்க்கும் காட்சி எப்போது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாமல் கொப்பளிக்க வைக்கும் விதமாக இருக்கும்.

இந்த படம் தந்த வெற்றியால், தனது குருநாதர் வகுத்த காமெடி பாதையையும் கெட்டியாக பிடித்துக்கொண்ட ரஜினி, தொடர்ந்து காமெடிக்கு முக்கியத்துவம் தரும் கதை, கதாபாத்திரங்களிலும் தோன்றி ரசிகர்களை மிகிழ்விக்க ஆரம்பித்தார்.

காமெடிக்கு என தனியாக எந்தவொரு கதாபாத்திரமும் இல்லாமல் படத்தின் தோன்றிய நடிகர்கள் அனைவரும் படத்தில் ஒரு காட்சியிலாவது நகைச்சுவையை வெளிப்படுத்தும் விதமாக இருப்பது இந்தப் படத்தின் தனித்துவமான விஷயமாக உள்ளது.

படத்தின் பிரதான கதாபாத்திரமான ஸ்ரீராமசந்திரமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் தேங்காய் சீனிவாசனை காமெடியன் போல் நடிக்க வைக்காமல், அவரது இயல்பான குணாதிசங்களை, உடல்மொழி போன்றவற்றை வெளிப்படுத்த வைத்திருப்பார் இயக்குநர் கே.பி.

நடிகர்களில் தேங்காய் சீனிவாசன் என்றால், நடிகைகளில் செளகார் ஜானகி, ரஜினியின் தில்லு முல்லுக்கு துணை போகும் விதமாக இருவேறு விதமான கதாபாத்திரங்களில் மாறுபட்ட வேரியேஷனை காட்டி சிரிக்க வைத்திருப்பார்.

படத்தில் சிறப்பு அம்சமாக தனது பேவரிட் ஆர்டிஸ்டான நாகேஷை, நாகேஷாகவே நடிக்க வைத்திருப்பதோடு, கிளைமாக்ஸில் கமல்ஹாசனை கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியில் வரவழைத்து கலகலப்பூட்டியிருப்பார்.

படத்தில் இடம்பிடித்த பூர்ணம் விஸ்வநாதன், விஜி சந்திரசேகர், மாதவி என பிற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கிடைத்த காட்சிகளில் புன்னகையை வரவழைத்திருப்பார்கள்.

தில்லு முல்லு கிளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் கண்ணதாசன் பாடல்களுக்கு எம்எஸ் விஸ்வநாதனின் இசையில் தில்லு முல்லு பாடல் தாளம் போடும் விதமாகவும், ராகங்கள் பதினாறு மெலடி பிரியர்களுக்கு விருந்தாகவும் அமைந்திருந்தன. குறிப்பாக புட்பால் காட்சியில் ரஜினி அடிக்கும் லூட்டிக்கு ஏற்ப வரும் பின்னணி இசை நம்மையும் மறந்து வாய்விட்டு சிரிக்க வைத்தன.

தில்லு முல்லு படத்தின் ஷுட்டிங்கின்போது தனது வாழ்க்கை துணைவியான லதாவை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த். கல்லூரி மாணவியாக அவரிடம் பேட்டி எடுக்க வந்த லதாவிடம் காதல் வயப்பட்ட ரஜினிகாந்த், பின்னாளில் திருமணமும் செய்து கொண்டார்.

அத்துடன் இந்தப் படத்தில் இடம்பிடித்த ரஜினி - தேங்காய் சீனிவாசன் காம்போ காட்சிகள் அனைத்து பெரிதும் ரசிக்கப்பட்டதுடன், 2013ஆம் ஆண்டு போர்ப்ஸ் இந்தியா இதழில் "இந்திய சினிமாவின் மிக சிறப்பான 25 நடிப்புகள்" பட்டியலில் இடம்பிடித்தது.

அத்துடன் இந்தப் படம் 2013இல் சிவா - பிரகாஷ் ராஜ் காம்பினேஷனில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

1981, மே 1ஆம் தேதி வெளியான தில்லு முல்லு படம், நூற்றாண்டு தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி படங்களில் டாப் சினிமாவாக இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply