• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா எனும் இசைராஜா! பாடல்களால் உயிர் பெற்ற திரைப்படங்கள்

சினிமா

நாட்டுப்புற இசை மூலம் தமிழ்த் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் இளையராஜா.3 தலைமுறைகள் அவரது இசையைக் கேட்டு வளர்ந்துள்ளது. தற்போதைய இசை வடிவங்களில் புதுப்புது ஒலிகள் கேட்டாலும், ராஜாவின் இசைக்கு இன்றைக்கும் மவு‌சு ‌குறையவில்லை என்பது உண்மை.

திரைப்பட இசையமைப்பாள‌ர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களுக்கு மெருகூட்‌டுவார்கள் ‌ - ஆனால், இளையராஜா மட்டும்தான் அதற்கு ‌உயிரூட்டுவார் - இது இசைஞானியைப் பற்றி திரைத்துறையினர் புகழ்ந்து கூறும் வார்த்‌தையாகும். 1970களில் தமிழ்த்‌ திரையிசையில் ஒரு வறட்சி ஏற்பட்டு, திரும்பிய இட‌மெல்லாம் இந்திப் பாடல்கள் ஒலித்த காலம். இந்திக்கு எதிராக குரல் ஒலித்த மாநிலமான தமிழகத்தில், பொருளே புரியாவிட்டாலும் இ‌ந்திப் பாடல்களை அனைவரும் விரும்பிக் கேட்டனர். இந்‌த நிலையை மாற்றி, மண்ணின் மணம் கமழும் இசையை தவழவிட்ட பெருமை இளையராஜாவையேச் சாரும். 

பதினாறு வயதினிலே, பொண்ணு ‌ஊருக்குப் புதுசு, கிழக்கே போகும் ரயில்‌, புதிய வார்ப்புகள் என கிராமியப் பின்னணி கொண்ட படங்களுக்கு இளையராஜாவின் இசைதான் முதுகெலும்பாக விளங்கியது. மண்ணின் இசையை அதன் தன்மை மாறாமல் தந்து ரசிகர்களை கிறங்க வைத்தார். தொடர்‌ந்து கிராம கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களுக்கு இசை அமைத்து‌ ‌வந்த அவருக்கு‌, மேற்கத்திய இசைத் திறனை காட்டும் வாய்ப்பும் கிட்டியது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர்‌, புகழ்பெற்ற தன்ராஜ் மாஸ்டரிடம் பியானோ மற்றும் கிடார் இசைக்கருவிகளை கற்றுக் கொண்டது, மேற்கத்திய இசையை செழுமையாகத் தர இளையராஜாவுக்கு பெரிதும் கைகொடுத்தது.  

பிரபல ஒளிப்பதிவாளர் நிவாஸ் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளியான எனக்காகக் காத்திரு படத்தில் வரும் 'பனி மழை விழும் பருவக்குளிர் எழும்' பாடல், பனிமலைகள் நிறைந்த அருணாச்சலப்பிரதேசம்,நேபாளம் போன்ற இடங்களில் எடுக்கப்பட்டிருந்தாலும், கேட்கும் அனைவரையும் அந்த இடத்திற்கே அழைத்து சென்று கிறங்கடிக்க கூடியது.1970 மற்றும் 80களில் இளையராஜா இசையில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த பல பாடல்கள் காலம் கட‌ந்து இன்றளவும் செவிகளில் தேனாகப் பாய்கின்றன. 

இளையராஜாவின் சில பாடல்களைக் கேட்கும்பொழுது இருந்த இடத்திலிருந்தே கற்பனை நிலப் பகுதிகளுக்கு மனம் நம்மை அழைத்துச் சென்றுவிடுவதுண்டு. சுட்டெரிக்கும் வெயிலில் பயணம் சென்றாலும் ஆன்மாவையே குளிர்விக்கும் ஆற்றல் இளையராஜாவின் சில பாடல்களுக்கு உண்டு. சிவாஜி நடிப்பில் 1979ல் வெளியான பட்டாக்கத்தி பைரவனில் இடம்பெற்ற 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்' பாடல் அந்த ரகம்.

உதிரிப்பூக்கள், நண்டு, முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே என இயக்குநர் மகேந்திரனின் படங்களில் இளையராஜாவின் இசை என்றைக்கும் தனித்தன்மையோடு இருப்பதுண்டு. குறிப்பாக நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் வரும், 'பருவமே... புதிய பாடல் பாடு' பாடல். அதிகாலையில் ஜாகிங் செல்லும் காதல் ஜோடிகளின் காலடிச் சத்தத்தை வைத்து ராஜா இசையமைத்த பாடல் அது. இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட விதம் பற்றி இசை நிகழ்ச்சி ஒன்றில் அவரே பகிர்ந்து கொண்டுள்ளார். காலடிச் சத்தங்களை உருவாக்க பல்வேறு முயற்சிகளை‌ செய்தும் திருப்தி கிடைக்காததால், இசைக்கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டி எழுப்பிய ஒலிய அந்தப் பாடலுக்கு பதிவு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார் இசைஞானி.

இளையராஜாவின் ஒலிப்பதிவு புதுமைக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அவற்றில் ஒன்று ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடித்து V.C.குகநாதன் இயக்கத்தில் 1982ல் வெளியான தனிக்காட்டு ராஜா படம். மேற்கத்திய இசைக்கருவிகளைக் கொண்டு படைக்கப்பட்ட 'சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே.. சந்தோஷப் பாட்டே வா...  பாடல்.. எஸ்பிபி - ஜானகி ஜோடியின் மாஸ்டர் பீஸ் ஆகும். குளிர்ந்த காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் S.P. ஷைலஜா பாடிய 'ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பல ராத்திரி மூடல கண்ணத்தான்' பாடலும் அதே  படத்தில்தான் இடம்பெற்றது. அதில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக்கலவை ரசிகர்களை மெய்மறக்கச் செய்துவிடும்.

இசை எனும் இளையராஜா விஜி கனைக்ட் அவர்களின் ரசனை தமிழின் மிகச்சிறந்த படங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடங்களுக்குள் வரக்கூடிய படம் அவள் அப்படித்தான். ருத்ரய்யா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடித்து 1978ல் திரைக்கு வந்த இப்படம், கதை சொன்ன விதத்தில் இருந்த முதிர்ச்சி அன்றைய ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தியது. இதுபோன்ற படங்களுக்கு இளையராஜாவும் அதிக சிரத்தை எடுத்துப் பணியாற்றுவார் என்பதை திரையுலகம் அறியும். அந்தப் படத்தில், கங்கை அமரன் எழுதி சில இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி ராஜா உணர்ச்சிபூர்வமான இசை வடிவங்களை தந்திருந்த பாடல் 'உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை' என்ற பாடல். 

இளம் ஜோடிகளை மையமாக வைத்து 1981ல் வெளியான அலைகள் ஓய்வதில்லை ‌மற்றும் பன்னீர் புஷ்பங்கள் படங்களுக்கு ராஜா தந்த இசை செவிகளில் தேனாகப் பாய்ந்தன. பின்னணி இசையும், செறிவான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல்களும் அந்த இரண்டு படங்களின் முதுகெலும்பாகும். அதிலும் பன்னீர் ‌புஷ்பங்களில் வரும் 

'கோடைக்காலக் காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே' பாடல் தேனமுதாகும். இயற்கையின் சுக‌த்தை பிரதிபலிக்கும் அந்தப் பா‌டலை மலேசியா வாசுதேவனுக்காகவே ‌ராஜா உருவாக்கியிருப்பாரோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு‌ இருக்கும் அந்த கானம். மவுத் ஆர்கன் இசையுடன் தொடங்கி கிடார் இசையில் பயணிக்கும் அந்தப் பாடலில் அத்தனை இனிமை. 

ஒரு பாடலைக் கேட்கும் போதே அது எங்கே நடைபெறும் கதை‌ என்பதை பிரித்தறிய முடியும் என்றால், அந்தப்பாடல் கண்டிப்பாக இளையராஜாவின் ஆர்மோனியத்தில் இருந்து பிறந்தது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு நுட்பமான வேறு‌பாடுகள் கொண்ட இசைக் கோவைகளை திரையிசையில் கொண்டுவருவது அவரது இயல்பு. 

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரும் இளையராஜாவும் இணைந்து‌ பணியா‌ற்றி‌ய படங்களின் பாடல்களைப் பற்றி விவரிக்க நாட்கள் போதாது. 

இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், ஒரு ஓடை நதியாகிறது, நினைவெல்லாம் நித்யா, தென்றலே என்னைத் தொடு என அந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள் தான். தளபதி‌ படத்திற்கா‌ன இசைக்கோர்ப்பு மும்பையில் நடந்தபோது, 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் பதிவு முடிந்தவுடன் அதில் பணிபுரிந்‌த கலைஞர்கள் அனைவரும் எழுந்து நின்று ராஜாவுக்கு கரவொலி எழுப்பி பாரா‌ட்டினார்களாம். மிகக் கடினமாக இசைக் கோவைகளை அந்தப் பாடலி‌ல் பயன்படுத்தியிருப்பார் ராஜா. 

சாதாரணப் படங்கள் கூட உயிர் பெற்றதற்கு ராஜாவின் பின்னணி இசைதான் காரணம் என்பதை அவருடன் பணியாற்றியவர்களும், ஏன்? அல்லாதவர்களும் கூட மறுக்க மாட்டார்கள். பின்னணி இசையில் இன்றும் முன்னணியில் இருப்பவர் இளையராஜா என்பதில் சந்தேகமே இல்லை
 

Leave a Reply