• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொட்டுக் கட்சி உறுப்பினரும் கோப் குழுவில் இருந்து விலகல்

இலங்கை

கோப் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவும் இன்று விலகுவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.

இதன்போது பிரதி சபாநாயகர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த யாப்பா பண்டார கோப் கோப் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சபையில் அறிவித்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த வசந்த யாப்பா பண்டார, தான் கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தல் விடுத்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, சுனில் ஹந்துன்னெத்தி காலத்தில் இருந்தே கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்படுவார் என்றும் ஆனால், தற்போது குழப்பமான சூழ்நிலைமை நிலவுவதால், கோப் குழுவில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்தார்.

அத்துடன், விரைவில் பதவி விலகல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோப் குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.எம். மரிக்கார், சரித ஹேரத், சாணக்கியன், ஹேஷா விதானகே மற்றும் காமினி வலேபொட உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் நேற்றைய தினம் பதவி விலகி இருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கோப் குழு உறுப்புரிமையிலிருந்து நேற்று முன்தினம் விலகுவதாக அறிவித்திருந்தார்.

கோப் குழுவின் புதிய தலைவராக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

அதன்படி, 3 நாட்களில் கோப் குழுவில் இருந்து விலகியவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply