• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply