• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மயான பாடலை மகிழ்ச்சி பாடலாக எழுதிய கண்ணதாசன் - எம்.ஜி.ஆர் படத்தில் இதை கவனித்தீர்களா?

சினிமா

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த முகராசி படத்தில் இடம்பெற்ற ஒரு மயான பாடலை கவியரசு கண்ணதாசன் எப்படி மகிழ்ச்சி பாடலாக எழுதி ரசிக்க வைத்தார் என்பதையும் அதிலுள்ள நிலையாமை தத்துவத்தையும் பாருங்கள்.

எம்.ஜி.ஆர் நடித்த முகராசி படத்தில் கவியரசு கண்ணதாசன், மயான பாடலை மகிழ்ச்சி பாடலாக எழுதிய பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது விளரி யூடியூப் சேனலில் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் உருவான சுவாரசியமான பின்னணியைக் கூறி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த முகராசி படத்தில் இடம்பெற்ற ஒரு மயான பாடலை கவியரசு கண்ணதாசன் எப்படி மகிழ்ச்சி பாடலாக எழுதி ரசிக்க வைத்தார் என்பதையும் அதிலுள்ள நிலையாமை தத்துவத்தையும் கூறியிருக்கிறார்.

சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா, எம்.என். நம்பியார் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் முகராசி, இந்த படத்தில் மயான காட்சியில் இடம்பெற்ற ‘உண்டாக்கி வைத்தவர்கள் இரண்டு பேர்’ என்ற பாடல் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இந்த சுவாரசியமான மயான பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாடியுள்ளார்.

பொதுவாக சினிமாவில் மயானத்தில் இடம்பெறும் பாடலை துக்கம் தொண்டை அடைக்கும் விதமாக மிகவும் சோகமாக இருக்கும் படியாக உருவாக்கி இருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்த முகராசி படத்தில் மயானப் பாடலை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக அமைத்திருப்பார்கள். 

இந்த பாடலை எழுதும்போது, கவியரசு கண்ணதாசனுக்கு 39-40 வயது. ஒரு மயான பாடலை மகிழ்ச்சி பாடலாக எழுதி அதில் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை விவரித்திருப்பார்.  “உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேர், இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேர்” என்று பிறப்பையும் இறப்பையும் முதலிலேயே சொல்லியிருப்பார். 

இந்த பாடலில் எம்.ஜி.ஆர், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மயானத்தில் பிணம் எரிக்கும் வேடத்தில் வந்து நடித்திருப்பார். எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற தத்துவப் பாடல்களில் இந்த படத்தின் பாடலுக்கு முக்கிய இடம் உண்டு. நீங்கள் இப்போது மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலை இணையத்தில் கேட்டுப் பாருங்கள், ஒரு மாயானப் பாடல் எப்படி மகிழ்ச்சிப் பாடலாகவும் தத்துவப் பாடலாகவும் பரிணமிக்கிறது என்பதை உணர்வீர்கள்.

Leave a Reply