• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிஜ நண்பனின் தப்பை மன்னித்து எம்.ஜி.ஆர் செய்த உதவி - நான் ஏன் பிறந்தேன் மெகா ஹிட் படப் பின்னணி இதுதான்!

சினிமா

எம்.ஜி.ஆர் வார்த்தையை மீறாத விநியோகஸ்தர்கள் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி சென்ற நிலையில், எதிர்பார்த்ததை விட படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

சிவாஜி நடிப்பில் சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த படம் குடியிருந்த கோவில். 1968-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, வாலி புலமை பித்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.

இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான உடனே, விநியோகஸ்தர்கள் அனைவரும் முன்பணம் கொடுத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தாயராக இருந்த குடியிருந்த கோவில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வந்தபோது, தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின் உதவியாளர், மேலும் ரூ5000 பணம் கொடுத்தால் தான் படத்தை விநியோகம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து தாயரிப்பாளர் ஜி.என்.வேலுமணியை தொடர்புகொண்டபோது, அவர் ஊரில் இல்லை என்று தெரியவர, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு சென்றுள்ளது. அவர் வேலுமணியை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் ஊரில் இல்லை என்று தெரிந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், நீங்கள் ரூ5000 அதிகமாக கொடுத்து படத்தை வாங்கிக்கொள்ளுங்கள். அதற்குமேல் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், அந்த நஷ்டப்பணத்தை நான் தருகிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் வார்த்தையை மீறாத விநியோகஸ்தர்கள் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி சென்ற நிலையில், எதிர்பார்த்ததை விட படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படம் வெளியான பின் ஊர் திரும்பிய வேலுமணி, குடியிருந்த கோவில் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் செய்தியை கேட்டு, எம்.ஜி.ஆருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர், படம் நன்றாக இருக்கிறது. ஆனால் அதிகமாக ரூ5000 வாங்க சொன்னீங்களே எதற்காக என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட வேலுமணி, கடைசி நேரத்தில் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகிவிட்டது அண்ணா. அதனால் தான் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது. அடுத்த படத்தில் சரி செய்துகொள்ளலாம். கதை ரெடியாக இருக்கிறது. நீங்கள் தயார் என்றால் நான் வருகிறேன் என்று சொல்ல, நீங்கள் வர வேண்டாம். நீங்கள் வாக்கு தவறிவிட்டீர்கள். இனிமேல் உங்களுக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லி போனை வைத்துள்ளார். அதன்பிறகு வேலுமணி எம்.ஜி.ஆரை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

சிவாஜியிடம் இருந்து பிரிந்து வந்ததால், இப்போது அவரிடமும் போக முடியாத வேலுமணி, முத்துராமனை வைத்து நம்ம வீட்டு தெய்வம் என்ற படத்தை எடுத்து வெளியிடுகிறார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக அன்னை அபிராமி என்ற படத்தை தொடங்க அந்த படம் தோல்வியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், ஜி.என்.வேலுமணியை கடனில் மூழ்கடித்தது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் இருந்த அவரிடம், கதாசிரியர் ஒருவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது தான் கடனை அடைக்க ஒரே வழி என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட வேலுமணி எனக்கு பதிலாக நீங்களே பேசுங்கள் என்று சொல்லிவிட்டு நான் அனுப்பியதாக மட்டும் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன்படி எம்.ஜி.ஆரை சந்தித்த அந்த கதாசிரியர், வேலுமணியின் நிலையை எடுத்து சொல்ல, மனம் இளகிய எம்.ஜி.ஆர் அடுத்த நாள் வேலுமணியை சத்யா ஸ்டூடியோவில் சந்திக்க வருமாறு கூறியுள்ளார். அடுத்த நாள் வந்த வேலுமணி, தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, எம்.ஜி.ஆரும் மன்னித்துள்ளார். அதன்பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான நான் ஏன் பிறந்தேன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

1972-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் வெற்றியை தக்கவைத்துக்கொண்ட வேலுமணி தனது கடனை அடைத்து முன்னுக்கு வந்துள்ளார். தவறு செய்தாலும், தனது நெருங்கிய நண்பரை மன்னித்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து முன்னேற்றியுள்ளார் எம்.ஜி.ஆர்
 

Leave a Reply