• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் பிதாமகர்

சினிமா

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் பிறந்த அப்துல் ஜப்பார்,தனது தந்தையுடன் வணிகம் செய்வதற்காக இலங்கைக்கு தனது எட்டாவது வயதில் புலம்பெயர்ந்தார்.கொழும்புவில் ஜாகிரா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய போது,"இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின்" சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

12-வது வயதில் தொடங்கிய ஊடகப் பயணம்,அவர் இறக்கும் 82-வது வயது வரை 70 ஆண்டுகள் தொடர்ந்தது."உலகின் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்" என்ற தகுதியை அடைந்தார்.இலங்கை வானொலியில் நாடகத்தில் நடிப்பதற்குக் "குரல் தேர்வு" இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்.அங்கு நாடக நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் இருந்ததோடு,இலங்கை முழுவதும் மேடை நாடகங்கள் வழியாகவும் கோலோச்சியவர்.இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்ததும் திருச்சி வானொலி நிலையத்தில் நாடக நடிகராக அரங்கேற்றம் செய்து,பின்னர் திருநெல்வேலி,சென்னை ஆகிய வானொலி நிலையங்களில் நாடக நடிகராகவும்,எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.அகில இந்திய அளவில் சிறந்த நாடகக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருதினைப் பெற்றிருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் நேரடி வர்ணனை செய்வதன் மூலமாக சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்ற பெயரைத் தவிர்த்து விட்டு எவரும் 'தமிழில் கிரிக்கெட் வர்ணனை' வரலாற்றை எழுத முடியாது.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் லண்டனில் நடந்த போது ஐ பி சி வானொலிக்காக தமிழில் நேரடி வர்ணனை செய்த முதல் தமிழர் என்ற பெருமையும்,மூத்த ஊடகவியலாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவர் தனது கூரிய அரசியல் விமர்சனங்கள் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.ஐரோப்பியா, கனடா,ஆஸ்திரேலியா என்று இவரது குரல் ஒலிக்காத வானொலி ஊடகங்களே இல்லை.இலங்கை அரசு வழங்கிய '*பத்ருல் மில்லத்*' என்ற விருதினைப் பெற்ற ஒரே இந்தியரும் இவர்தான்.'தமிழ் மாமணி','முத்தமிழ் தாரகை','சிறந்த மொழி‌பெயர்ப்பாளர் விருது',ஐபிசி வானொலி வழங்கிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது,அமீரகத்தின்‌ தமிழ் அமைப்புகள் இணைந்து வழங்கிய '*ஊடகச் செல்வர்*' விருது,'சிறந்த ஒலிபரப்பாளருக்கான விருது' சாத்தான்குளம் மத நல்லிணக்கப் பேரவை வழங்கிய 'மண்ணின் மைந்தர்' விருது என்று விருதுகளைக் குவித்து வைத்திருக்கும் அப்துல் ஜப்பார் தனது சுய சரிதையைக்,'காற்று வெளியினிலே..' என்ற புத்தகமாகவும் எழுதி இருக்கிறார்.'அழைத்தார் பிரபாகரன்','இறைத்தூதர் முஹம்மது' என்ற மொழிபெயர்ப்பு நூல் இரண்டும் இவரது பிற படைப்புகள்.

உலகமெங்கும் தான் பிறந்த ஊரைச் சுமந்து சென்ற பெருமைக்குரியவர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

-ஆசிஃப் மீரான்

Leave a Reply