• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழால் தானும் வாழ்ந்து தன் வாழ்வால் 

சினிமா

தமிழையும் வாழ வைத்த கவிஞர் கந்தவனம் இயற்கை எய்தினார்!
வாழ்நாள் முழுவதும் தமிழோடும் தமிழரசோடும் பயணித்து தமிழ்த்தேசியவாதியாக வாழ்ந்த தமிழீழத்தின் மூத்த கவிஞரது இழப்பு தமிழ் உலகிற்கு - தமிழ் சுவைஞர்களுக்குப் பேரிழப்பாகும். அன்னாருக்கு ஈழநாடு பத்திரிகை தலை தாழ்த்தி அஞ்சலிக்கின்றது.
கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். 28.10.1933 ல் நுணாவிலில் பிறந்தார். விநாயகர் சின்னம்மா அவரது பெற்றோர். பசுபதியும் மார்க்கண்டும் அண்ணன்மார். கணபதிப்பிள்ளை இளையவர். 20.08.1964ல் குரும்பசிட்டி வாசியானார். தவமணி அன்பு நிறை மனைவி.  வாணியும் வாரணனனும் பண்பான பிள்ளைகள். ருத்திராவும்  துஷித்தாவும் மருமக்கள்.
நுணாவில் கணேச வித்தியாசாலை சாவகச்சேரி றிபேக் கல்லூரி சென்னை கிறிஸ்தவ கல்லூரி கோவை கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவன். சென்னை பல்கலை கழக பட்டதாரி. மாத்தளை புனித தோமையர் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் யோகபுரம் மகாவித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியர். அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அதிபர்.  தென்ஆபிரிக்கா  புனித கத்பேட்ஸ்  உயர் கல்லூரி யில மானிடவியல் துறைத் தலைவர்.   
கனடா தேசீய கீதத்தை அழகாகத் தமிழாக்கம் செய்தவர் எங்கள் கவிநாயகர் கந்தவனம் அவர்கள். 
அவரது இனிய தமிழ் வார்த்தைகளின் அணிவகுப்பை ஏற்றே தேசியக் கொடி கடந்த 25 வருடங்களாக மதிப்புடன் வானில் பறப்பது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் பெருமையாகும். 
புலன்களைப் பூப்பூக்க வைக்கும் கவிஞர்.உணர்வுகளுடன் உறவாடி அவற்றை உச்சத்துக்கு ஏற்றி வைக்கும் கட்டுரையாளர்.
இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களையும் இதயத்தின் சந்தோஷமான பரப்புகளுக்கு அனுப்பி வைக்கும் அதீத ஆற்றல் பெற்ற இனிமையான எழுத்தாளர்.
மேடைகளுக்கு கம்பீரத்தையூட்டி சபையோர்குக் கௌரவம் சேர்க்கும் சுவாரஸியமான பேச்சாளர்.
உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர். வசீகரம் மிக்க இந்த அடையாளங்களைத் தனதாகக் கொண்டிருந்தவர் பாவரசர் கவிநாயகர் கந்தவனம் அவர்கள் என்பதை காழ்புணர்வு இல்லாத ஒவ்வொரு தமிழனும் உளப்பூர்வமாக ஒத்துக் கொள்வான். 
தமிழால் தானும் வாழ்ந்து தன் வாழ்வால் தமிழையும் வாழ வைத்த இனிய தமிழர் அவர். அவரது இதயம் - இலக்கியத்திடமிருந்தது.அதனால் என்றும் இளமையோடிருந்தது. 

அவரது இலக்கியத்திடம் - இதயம் இருந்தது.அதனால் இன்றும் துடிப்புடன் மிளிர்கின்றது. 
அறிவால்....ஆற்றலால்...அனுபவத்தால் அவர் முதியவர். இலகுவாய்...இனிமையாய்.....இதயத்தால் எழுதுவதில் அவர் இளையவர். 
1954 ம் ஆண்டு அவரது முதலாவது குறு நாவலான ஒன்றரை ரூபாய் வெளிவந்த உடனேயே தமிழ் இலக்கிய உலகம் அவரது பெயருக்கு அடிக்கோடு இட்டுக் கொண்டது. இதுவரை 80 நூல்களைத் தந்துள்ளார் என்னும் பொழுது விரியும் கண்கள் இன்னும் 45 ஆவது வெளிவரக்கூடும் என்பதை அறிந்தால் மேலும் அகல விரியும். 
தமிழ் இலக்கியவாதி ஒருவருக்கு முதலாவது மணிவிழாவாகவும் அதுவே முதன்மையான விழாவாகவும் கனடிய மண்ணில் அவரது மணிவிழா 1993ல் அமைந்தது. 
முதன்மையான அந்த இனிய தமிழரின் சிறப்பான சரிதை கனடாவில் வெளிவந்த் முதலாவது வரலாறு கூறிய தமிழ் நூல் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது. 
ஆசிரியராய் அதிபராய் அவர் வாழ்ந்த வாழ்வு மனிதத்துக்கு மதிப்பெண் போடக் கற்றுக் கொடுத்தது. 
நடிகராய் இயக்குனராய் நாடகப்போதனாசிரியராய் அவர் தாங்கிய வேஷம் சமுகத்துக்கு அரிதாரம் பூசுவோரை அம்பலப்படுத்தி அவர்களின் இதயத்தின் உட்தோலைக் கூட உரிக்க வைத்துச் சீர்திருத்தம் செய்தது. 
கவியரங்கங்கள் கருத்தரங்கங்கள் பட்டி மன்றங்கள் சமயச் சொற்பொழிவுகள் என்பன உரைகளால் உலகை உரசலாம் என உணரவைத்து மனிதரில் இறந்து கிடந்த மனிதத்தை எழுப்ப வைத்தது. 
இதயங்களை இலக்கு வைத்தே அவரது இலக்கியப் பணி அமைந்தது. 
அதனால் இலக்கியக் களங்களெல்லாம் அவரின் பெயரை உற்சாகமுடன் உச்சரித்தன - பிரியமுடன் பிரசுரித்தன. 
கவிதை என்பது அவரது வாழ்வின் முகவரி! 
அமரரின் இறுதிக்கிரியையும் ஈமச்சடங்கும் வார இறுதியில் ரொறன்ரோவில் நிகழும்.   
கண்ணீர் பூக்கள் கொண்டு இதயம் அஞ்சலிக்கின்றது!
எஸ்.ஜெகதீசன்.

Leave a Reply