• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பயணிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக வனசீவராசிகள், வன வள பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

எவ்வாறிருப்பினும் நான் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சராகவே அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்றேன்.

அந்த வகையில் பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடனேயே இருக்கின்றது. இனிவரும் காலங்களிலும் அதில் எந்த மாற்றங்களும் இருக்காது. உத்தேச தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் நகர்வுகள் தொடர்பாக

விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அதற்கமைய இறுதி தீர்மானத்தை எடுப்போம்.

தேவையென்றால் ஏனைய கட்சிகளைப் போன்று கூட்டத்தைக் கூட்டி பொதுஜன பெரமுனவின் பலத்தைக் காண்பிக்கலாம். 2015இல் தோல்விடையந்ததன் பின்னர் திரைக்கு பின்னால் பாரிய மக்கள் சக்தியை படிப்படியாக தோற்றுவித்து, காலி முகத்திடலில் ஒட்டுமொத்த பலத்தையும் காண்பித்தோம்.

அதன் ஊடாக 2018 உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

அதனை விட சிறந்த யுக்தியை இம்முறையும் பின்பற்றுவோம். அதனை விடுத்து சில கட்சிகளைப் போன்று மக்களை ஒன்று திரட்டி கூட்டங்களை நடத்தி போலியான பலத்தைக் காண்பிக்க நாம் விரும்பவில்லை.

ஏனைய கட்சிகள் தொடர்பிலும், எமது கட்சி தொடர்பிலும் மதிப்பீடு செய்து அவற்றை அறிந்து வைத்திருக்கின்றோம். எனவே பொதுஜன பெரமுனவுடன் இணையும் எந்தவொரு கூட்டணியும் நிச்சயம் வெற்றி பெறும் என்பது உறுதி” இவ்வாறு நீர்ப்பாசன அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply