• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ...சுவையான தகவல்களை தருகிறார் .. இயக்குனர் எஸ் பி முத்துராமன்.

சினிமா

படப்பிடிப்பின்போது நினைத்துப் பார்க்க முடியாத சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கும். ‘ ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல், சுஜாதா இருவரும் அறிமுகமாகும் காட்சி. சுஜாதா தன் வீட்டு வாசலில் பூத்திருக்கும் ஊதாப்பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பார். அப்போது ஆகாயத்தில் ஒரு விமானம் பறக்கும். விமானம் போகும் திசையில் சுஜாதாவின் கண்கள் செல்லும்போது, மாடியில் தேகப் பயிற்சி செய்துகொண்டிருக்கும் கமலை பார்ப்பார்.

இருவர் கண்களும் சந்திக்கும். புஷ்பா தங்கதுரையின் கற்பனை இதுதான். அந்த நேரத்தில் விமானத்துக்கு எங்கே போவது? இருவரது பார்வைகள் சந்திப்பதை எடுத்துவிட்டு, விமானம் பறப்பதை ஸ்டாக் ஷாட்டில் எடிட்டிங்கில் இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து படப்பிடிப்புக்குத் தயாரானோம்.

அந்த நேரத்தில் தூரத்தில் விமானம் வரும் சத்தம் கேட்டது. ஒரே ஆச்சர்யம். அந்த விமானம் நம் திசை நோக்கி வந்தால் மிஸ் பண்ணாமல் எடுத்துவிட வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் பாபு சாரிடம் சொன்னேன். சுஜாதாவையும் கமலையும் ஷாட்டுக்குத் தயாராக இருங்கள் என்றேன். கமலுக்கு ஒரே குஷி. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். விமானம் வந்தது. எங்களுக்கு தேவையான மாதிரியே மேலே பறந்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயம். சிறப்பாக அதை படமாக்கினோம். ஒட்டுமொத்தப் படக் குழுவினரின் ஈடுபாட்டால்தான் அந்தக் காட்சியை சிறப்பாக எடுக்க முடிந்தது.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்துக்காக கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு பாடலை எழுதி வாங்குவதற்காக இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஐயா அவர்களோடு போனேன். கவியரசர் கவிதா ஹோட்டலில் அறை எடுத்து பாடல் எழுதிவந்த நேரம் அது. அவரைப் பார்க்க அங்கு பலரும் வந்து காத்திருந்தார்கள். இந்தப் பரபரப்பான சூழலில் எப்படி பாடல் எழுதுவார் என்ற சந்தேகம் இருந்தது. அவரது நிர்வாகி மக்களன்பனிடம் கேட்டேன். ‘நிச்சயம் உங்களுக்கு இன்று பாடல் எழுதுவார்’ என்றார். அவர் சொன்னபடி கவியரசர் வந்தார்.

அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் அமைதியாக, ‘ஆண்டவன் இல்லா உலகம் இது’ பாடலை எழுதி கொடுத்தார். ஆச்சர்யத்தோடு அந்த நிர்வாகியிடம், ‘‘நீங்க சொன்ன மாதிரி எழுதி கொடுத்துட்டாரே!’’ என்று கேட்டேன். ‘‘அங்கே ஒருத்தர் நிக்கிறார் பாருங்க. அவர் கவியரசருக்குக் கடன் கொடுத்தவர். அவருக்கு இன்னைக்கு பணம் கொடுக்கணும். உங்களுக்குப் பாட்டெழுதுறதில் வந்த பணத்தை கடன்காரருக்குக் கொடுத்துட்டார்’’ என்றார். கவியரசரைப் போல் சம்பாதித்தவர்களும் இல்லை. கடன்பட்டவர்களும் இல்லை.

பாண்டிச்சேரியின் பேக் வாட்டரில் படப்பிடிப்பை தொடங்கினோம்.

இயற்கை காட்சிகள் சிறப்பாக இருந்தால் ஒளிப்பதிவாளர் பாபு அதை இன்னும் அழகாக்கிவிடுவார். படத்தில் பாடல் காட்சி மிகவும் அழகாக அமைந்தது. அப்போது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கேரளப் பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி மிகவும் அழகு என்று எழுதியிருந்தார்கள். அது பாபுவின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்த பாராட்டு.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படம் ரிலீஸுக்குத் தயாரானது. கமர்ஷியல், சென்டிமெண்ட் என்று ஒரு பாதையில் போய்க்கொண்டிருந்த இயக்குநர் முத்துராமனை கமல்ஹாசன் இப்படி இழுத்து விட்டுவிட்டார் என்று சிலர் சொன்னார்கள். 

அந்தக் கமலை நாங்கள் கமர்ஷியலுக்கு இழுத்து வந்தப் படம் ஏவி.எம்மின் ‘சகல கலா வல்லவன்’.

Paravasam Nayagan

Leave a Reply