• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பைடனை விவாதத்திற்கு அழைத்த டிரம்ப்

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி கொண்ட டிரம்பிற்கு போட்டி வேட்பாளராக களம் இறங்கிய அக்கட்சியை சேர்ந்த தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே, நேற்று, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து அதிபர் பதவி போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவருக்கும் இடையே மட்டும்தான் என்பது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

"நமது நாட்டு நலனுக்காகவும், அமெரிக்கா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் நானும் பைடனும் விவாதிக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை நான் விவாதிக்க அழைக்கிறேன். எந்த இடத்திலும், எந்நேரமும் விவாதிக்கலாம்" என டிரம்ப் தனது பிரத்யேக வலைதளமான "டிரூத் சோஷியல்" (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என ஏங்குகிறார் டிரம்ப். அதிபர் பிரசாரத்தில் ஒரு நிலையில் விவாதங்கள் நிச்சயம் நடைபெறும். ஆனால், பைடனை பார்த்தே ஆக வேண்டும் என டிரம்ப் விரும்பினால் அவர் அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை; எப்போதும் சந்திக்கலாம்" என பைடனின் பிரசார குழுவின் ஆணையர் மைக்கேல் டைலர் (Michael Tyler) தெரிவித்தார்.

2020ல், அப்போதைய தேர்தல் காலகட்டத்தில் பைடன் மற்றும் டிரம்ப், இருவரும், 2 முறை விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply