• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்..

சினிமா

சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நாடகத் துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே.  தனது முதல் நடிப்புப் பள்ளியான பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து அங்கே நடனம், பாட்டு, நடிப்பு, வசனம் என சகல வித்தைகளையும் அயராது உழைத்து கற்றுக் கொண்டார். ஆரம்ப காலகட்டங்களில் எந்த வேடம் கொடுத்தாலும் தயங்காது ஏற்று நடித்து தனது நடிப்பினை மெருகேற்றிக் கொண்டார். பெண்வேடம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

பின் கடுமையான முயற்சிகளுக்குப் பின் முதன் முதலாக வெளிநாட்டு இயக்குநர் எல்லீஸ் டங்கன் இயக்கிய சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலமாக 1936-ல் தனது முதல் திரைப்பயணத்தினைத் தொடங்கினார். அதன்பின் கலைஞர் கதை வசனம் எழுதிய மலைக்கள்ளன் படத்தின் மூலமாக பிரபலமாகி பின்னால் தமிழ்நாட்டினையே ஆளும்  சக்தியாக உருவெடுத்தார்.

எம்.ஜி.ஆர் ஆரம்ப காலகட்டங்களில் கடவுள் பக்தி கொண்டவராக இருந்தார். தனது இஷ்ட தெய்வமாக முருகன் மற்றும் குருவாயூரப்பனை வணங்கினார். பின்னாளில் திமுகவில் இணைந்த பிறகு பகுத்தறிவுவாதியாக மாறி அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் போது அப்போது சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் பியூ சின்னப்பாவுக்கு வில்லனாக தனது அண்ணன் சக்ரபாணி நடித்த மகமாயை என்ற படத்தின் ஷுட்டிங்கை காணச் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் உருவத்தினையும், அழகான தோற்றத்தையும் கண்ட ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தார் அவரை மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து உடனடியாக தங்களது நிறுவனத்திறக்க மாதச் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் ஸ்ரீ முருகன் என்ற படத்தினைத் தயாரிக்கையில் அதில் சிவனாக எம்.ஜி.ஆரை நடிக்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் ருத்ர தாண்டவ நடனக் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். இந்தக் காட்சிக்காக எம்.ஜி.ஆர். குமார வாத்தியார் என்ற நடனக் கலைஞரிடம் 6 மாத காலம் தீவிரமாகப் பயிற்சி எடுத்து அந்தக் காட்சியில் நடித்தார்.

தெலுங்கு நடிகை கே.மாலதியுடன் இணைந்து இவர் ஆடிய நடனக் காட்சி அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. இந்தக் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. இவர்களது இந்த நடிப்பால் ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் அடுத்த படமான ராஜகுமாரி படத்திலும் ஹீரோவாக நடிக்க அடித்தளமாக அமைந்தது.
 

Leave a Reply