• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்சினிமாவில் குறிஞ்சிப் பூ பூப்பது போல அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் வருவதுண்டு.

சினிமா

அப்படியான ஒரு திரைப்படம் #தவமாய்_தவமிருந்து .  

தமிழ் சினிமா எனும் சீக்காளிக்கு அவ்வப்போது மருத்துவம் செய்து , நல்ல திரைப்படங்கள் மூலம்‌ உயிர் தந்த மருத்துவர், இயக்குநர் #சேரன்  என்றால் மிகையாகாது.

தமிழ் சினிமா கமர்ஷியலை நோக்கி வேக வேகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் "தவமாய் தவமிருந்து" போல  மென்மையான ஒரு ஃபீல் குட் திரைப்படம் தருவதற்கு தனி தைரியம் வேண்டும்.

நம் அம்மாவை ஆசை தீர கொண்டாடித் தீர்க்கும் நாம், நம் அப்பாவை மட்டும் கொண்டாட மறந்து விடுகிறோம். நமக்கு ஒரு குழந்தை பிறந்து, நாம் அப்பா ஆன பிறகுதான், நம் அப்பாவை நாம் உணரத் தொடங்குகிறோம்.

நமக்காகவே வாழும் நம் அப்பாவை கொண்டாடிய திரைப்படம் இந்த "தவமாய் தவமிருந்து".

முத்தையா, சாரதா எனும் தம்பதியர், ராமலிங்கம், ராமநாதன் என அவர்களுக்கு இரு மகன்கள். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் மொத்த சம்பவங்களின் தொகுப்பே படத்தின் கதை.

ஏழ்மையில் வாழும் ஒரு தந்தை, தன் குடும்பத்திற்காக எந்த அளவிற்கு தன்னை வருத்திக் கொண்டு வாழ்கிறார் என்பதை அச்சு அசலாக படம் பிடித்து காட்டியது இந்த படத்தின் சிறப்பு.

பணக் கஷ்டம் உள்ள ஒரு வீட்டில், தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை செலவுகள் கூட பெரும் பாரமாக இருக்கும். அதையும் தாண்டி நம் தந்தை அந்த பாரத்தை தன் தலையில் சுமந்து, நம்மை மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட வைக்கும் சூழலை காட்சிப்படுத்திய விதம் புதிது.

விடிந்தால் தீபாவளி, ராஜ்கிரண் கையில் சுத்தமாக பணமில்லை. தீபாவளிக்கு தன் பிள்ளைகளுக்கு புதுத்துணி, பட்டாசு வாங்காமல் சென்றால் பிள்ளைகள் ஏமாந்துவிடுவார்கள். இப்படியான சூழலில், இரவு முழுவதும் கண்விழித்து போஸ்ட்டர் ஒட்டி, காலையில் பிள்ளைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதை, அரைத் தூக்கத்தில் கண்டு மகிழும் தகப்பனின் சந்தோஷத்தை நமக்கும் உணர வைத்திருப்பார்.

இரண்டு பிள்ளைகளையும் சைக்கிளில் வைத்துக் கொண்டு, கதை சொல்லி, கேள்விகள் கேட்டு பாடல் பாடிக்கொண்டே அந்த செம்மண் காட்டில் ராஜ்கிரணின் கால்கள் சைக்கிள் மிதிக்கையில், செம்மண் புழுதி நம் கண்களை ஈரமாக்கும்.

பிள்ளைகளின் உயர் படிப்பிற்காக கடன் வாங்கி அலைவது, கல்லூரியில் சேர்க்க போராடுவது, பிள்ளைகளை எப்படியாவது கரை சேர்த்து விட வேண்டும் எனத் துடிப்பது வரை, திரையில் நாம் கண்டது நம்‌ ஒவ்வொருவரின் அப்பாவையும் தான்.

கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் பிள்ளைகளுக்கு கோழிக்கறி வேண்டுமா ஆட்டுக்கறி வேண்டுமா என அம்மா சரண்யா கேட்பதெல்லாம் அக்மார்க் அம்மா மனது.

பெற்றோர் நமக்காக எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், இளமையில் நாம் அதை உணர்வதே இல்லை.. சேரன் தன் கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என பொய் சொல்லி பணம் கேட்கையில், ராஜ்கிரண் தன் சைக்கிளை விற்கலாம் என யோசிப்பார், உடனே அம்மா சரண்யா தன் நகையை பக்கத்து வீட்டில் அடமானம் வைத்து சேரனுக்கு பணம் கொடுப்பார். இது ஒவ்வொரு வளர்ந்த பிள்ளையும் தன் பெற்றோரை உணரும் காட்சி.

இவ்வளவு ஏழ்மையிலும் பார்த்து பார்த்து வளர்த்த தன் மகன் , தன் பொண்டாட்டி வந்ததும், மொத்தமாக பொண்டாட்டியின் பின் செல்வது, அவளுக்காக பெற்றோரை எதிர்ப்பது, தனிக் குடித்தனம் செல்வது என படத்தில் வரும் காட்சிகள், இன்று  பொண்டாட்டி தாசன்களாய் மாறி வாழும் ஆண்களுக்கு செருப்படி காட்சி.

அப்பா அம்மாவை பற்றி யோசிக்காமல், கல்லூரியில் ஜாலியாக சுற்றுவது, காதலிப்பது, அந்த காதலியுடன் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி , அன்றாட வாழ்க்கையில் ஒரு ஆதரவும் இன்றி தவிப்பது என சேரனின் காதல் காட்சிகள், ஒவ்வொரு இளைஞனுக்கும் பாடம்.

வாழ்க்கையில் போராடி, ஒரு நல்ல நிலைக்கு வரும் சேரன், தன் பெற்றோரை தன்னுடன் வைத்து பார்த்துக் கொள்வார். ஆனால் வயதான பெற்றோருக்கு நகர வாழ்க்கை ஒத்து வராது. இது கிராமத்து மனிதர்களை நம் கண் முன்னே உலவ விட்ட தருணம்.

அம்மா சரண்யா இறந்த பிறகு அப்பா ராஜ்கிரண் தனிமையில் வாடுவதாக காட்சிகள் வரும். அதாவது, மனைவி இல்லாமல் போனால், ஒரு கணவனின் வாழ்க்கை இருண்டு விடும்.  அதற்குப் பிறகான வாழ்க்கை நரகமாகிவிடும்  என்ற உண்மை கோணம் இது.

இறுதியில் தன் தந்தை இறந்த பிறகு, தன் அப்பா அம்மா வாழ்ந்த வீட்டிற்கே சென்று வாழும் சேரன், தன் பிள்ளைகளுக்கு, தன் அப்பா அம்மாவை பற்றிய வரலாற்றை படிக்க சொல்லிக் கொடுப்பதாக படம் நிறைவடையும்.

நம் எத்தனை பேர் நம் பெற்றோரை கொண்டாடுகிறோம். நம் குழந்தைகளுக்கு என்றைக்காவது நம்‌ பெற்றோரின் அருமை பெருமைகளை சொல்லிக் கொடுத்துள்ளோமா?

நம் கடந்த தலைமுறை மூத்தோர்களை, நம் வரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பதே நாம் அவர்களை கொண்டாடியதற்கு சமம்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம் வீடுகளில் கேமரா வைத்து படம் பிடித்தது போல் அத்தனை யதார்த்தம்.

இயக்குநர் சேரனுக்கு இந்தப் படம் வாழ்நாள் பெருமை. நடித்த நடிகர்களுக்கும் அப்படியே.

படத்தின் மொத்த கதையும் ராஜ்கிரணை சுற்றியே நகரும். நம் அப்பாவை கண் முன் காட்டியிருப்பார் அவர். அம்மாவாக சரண்யா கொஞ்சமும் சளைக்காமல் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

கிராமத்து பழைய வீடு, செம்மண் காடு, பனை மரங்கள், அய்யனார் சாமி, சைக்கிள் பயணம் என ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வந்த உணர்வை நமக்கு தந்தது இப்படம் .

"ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அப்பா அம்மா",  "நானே தொலைந்த கதை", "ஒரு முறைதான் ஒரு முறைதான்" என பாடல்கள் அனைத்தும் கதையோடுஇணைந்து வந்து கதை சொல்லும்.

கமர்ஷியலை கொண்டாடும் தமிழ் சினிமாவில், கவிதை போன்ற அழகான ஒரு திரைப்படத்தை தந்த சேரனுக்கு பெரும் நன்றி.

நமக்காக வாழும் நம் பெற்றோரை, குறிப்பாக நம் அப்பாவை சரியான நேரத்தில் கொண்டாடத் தவறி விடுகிறோம். காலம் கடந்து கொண்டாடி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

பால் கொடுத்து, சோறு ஊட்டும் நம் அம்மாவை போல, தன் தோள்களில் சுமந்து, தன் வாழ்க்கையை நமக்காக வாழும் நம் அப்பாவும் நாம் கொண்டாடப்பட வேண்டிய உயிரே.

"தவமாய் தவமிருந்து" திரைப்படம், இந்த உலகத்தில் வாழும்  ஒவ்வொரு தந்தைக்கும், மகன்களின் சார்பாக இயக்குநர் சேரன் செய்த சமர்ப்பணம்..! 

மணிகண்டன் சங்கரநயினார்

Leave a Reply