• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டாராக்கிய படம் 

சினிமா

அமெரிக்கரான எல்லிஸ்.ஆர்.டங்கன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பங்களிப்பைச் செய்திருக்கிறார். படங்களில் அப்போதிருந்த நாடகத்தன்மையை மாற்றி நடிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். ‘சதிலீலாவதி’ (1936) படம் மூலம் இயக்குநராக அறிமுக மான டங்கன், எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். ‘சதிலீலாவதி’க்குப் பிறகு அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து படங்கள் இயக்கினார். அதில் ஒன்று ‘அம்பிகாபதி’.

கம்பர் மகன் அம்பிகாபதிக்கும் குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதிக்குமான காவிய காதல் தான்படம். அம்பிகாபதியாக எம்.கே. தியாகராஜ பாகவதர், அமராவதியாக எம்.ஆர்.சந்தானலட்சுமி, கம்பராக செருகளத்தூர் சாமா, குலோத்துங்கச் சோழனாக பி.பி.ரங்காச்சாரி, ருத்ரசேனனாக டி.எஸ்.பாலையா ஆகியோர் நடித்தனர். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரமும் படத்தில் உண்டு.இளங்கோவன் வசனம் எழுதினார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா வசனங்களின் போக்கு மாறியது.

பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதி, இசை அமைத்திருந்தார். பின்னணி இசையை வங்காளத்தைச் சேர்ந்த கே.சி.டே அமைத்தார். இவர் பார்வையற்றத் தெரு பாடகராகப் பல படங்களில் நடித்திருக்கிறார். சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கல்கத்தா ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பெனியில் உருவாக்கப்பட்டது.

அந்த காலத்திலேயே ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை நடிக்கவைத்து பல காட்சிகளைப் பிரம்மாண்டமாக இயக்கி இருந்தார் டங்கன். படத்தில் டி.எஸ்.பாலையா வில்லன். அவருக்கும் பாகவதருக்கும் அருமையான வாள் சண்டையும் உண்டு.

ஒய்.வி.ராவ் இயக்கத்தில் பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ (1937) சூப்பர் ஹிட்டானதால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இதையும் ஒய்.வி.ராவ் இயக்க வேண்டும் என்று விரும்பினார் தயாரிப்பாளர். ஆனால், ‘சிந்தாமணி’ வெற்றியால், ராவ் அதிக சம்பளம் கேட்க, பிறகுதான் டங்கனை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தில் செருகளத்தூர் சாமா நடித்த கம்பர் கதாபாத்திரத்துக்கு, ரவீந்தரநாத் தாகூர் இன்ஸ்பிரேஷனில் தலைமுடி மற்றும் தாடியை வைத்தனர்.

காதல் காட்சிகளில் துணிச்சலாக சில முயற்சிகளை மேற்கொண்டார், டங்கன். அந்தக் காலத்திலேயே நெருக்கமான காட்சியை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்தக் காட்சிகள் அப்போது நினைத்துப் பார்க்க முடியாதது. அதோடு கன்னத்துடன் கன்னம் வைத்துக் காதலில் உருகும் காட்சியை குளோஸ்- அப்பில் காட்டியிருப்பார். இப்படியான காட்சி அமைப்பு முதல் முறையாக இதில்தான் இடம்பெற்றது. இதனால் அமெரிக்க கலாச்சாரத்தை இங்கே பரப்புவதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.

கதை, வசனக்கர்த்தா இளங்கோவன், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாபநாசம் சிவன் ஆகியோரின் பெயர்களை, டைட்டிலில் போடச் சொன்னதும் டங்கன்தான். அப்போது அது நடைமுறையில் இல்லாதது. இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது. இதன் வெற்றி தியாகராஜ பாகவதரை தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. இந்த படம், 1937-ம்ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.

இதே கதையில் சிவாஜி, பானுமதி நடித்து 1957-ம் ஆண்டும் ஓர் ‘அம்பிகாபதி’ வெளியானது. அதில் பழைய அம்பிகாபதியில் ஹீரோவாக நடித்த தியாகராஜ பாகவதரை சிவாஜிக்கு அப்பாவாக நடிக்கக் கேட்டனர்.

“சிவாஜியின் அப்பாவாக நடிப்பதில் தயக்கம் இல்லை. ஆனால் அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க மாட்டேன். காரணம், நான் அம்பிகாபதியாகவே, ரசிகர்கள் இதயங்களில் வாழ்ந்து வருகிறேன்” என்றாராம் பாகவதர்.

Leave a Reply