• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் உடனடி போர் நிறுத்தம் தேவை - அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

சினிமா

ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது. ஒரு முறை மட்டுமே ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அதன்பின் இரு தரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்திற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியில் முடியவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் உணவு வாங்க கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினார். மேலும், நிவாரணப் பொருட்கள் அமெரிக்க விமானங்கள் மூலம் வான்வழியாக காசா மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை. நமது மனிதநேயம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இஸ்ரேல் அரசு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில் விதிவிலக்கு என்பதே கிடையாது.

உடனடியாக போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆறு வாரம் போர் நிறுத்தம் இன்னும் அதிகமான உதவிப்பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடைய உதவியாக இருக்கும்." என்றார்.
 

Leave a Reply