• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்கு தெரிந்த ஶ்ரீதேவி - ஜீவன்

சினிமா

நான் இந்தியாவில் இருந்த போது மிக நெருக்கமாக தமிழ் திரைப்படத் துறையினரை விட தெலுங்கு திரைப்படத் துறையினருடனே இருந்தேன். நானும் , தெலுங்கு ஒளிப்பதிவாளர் / இயக்குனர் எம்.வீ. ரகு அவர்கள் மிக நெருக்கமாக இருந்த காலம் அது. சில காலம் நாங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம். அவர் ஒளிப்பதிவு செய்து தமிழில் வெளியான படங்கள், கார்த்திக், பானுபிரியா நடித்த, பாடும் பறவைகள் (Anveshana) , மோகன், பானுபிரியா நடித்த  சலங்கையில் ஒரு சங்கீதம் , கமல், ராதிகா நடித்த, சிப்பிக்குள் முத்து (Swati Mutyam) மிக முக்கியமானவை. 

தெலுங்கில் கல்லு (கண்) என்ற திரைப்படத்தினூடாக எம்.வீ.ரகு அண்ணன் இயக்குனரானார். 
அவர் ஆந்திரா போன  பின் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சுதாகர் சில காலம் என்னோடு இருந்தார். 
இக் காலத்தில் தெலுங்கு அவுட்டோர் யுனிட் நண்பர்களில் பலர் எனது கே.கே. நகர் வீட்டில் தங்கியிருந்தார்கள். அக் காலத்தில் என்னிடம் போகுமிடத்தில் நின்று விடும் ஒரு அம்பாசிடர் காரும் இருந்தது. அது தாய் மூகாம்பிகை பிலிம்ஸ் சிதம்பரம் எனும் , இயக்குனரிடமிருந்து எடுத்துக் கொண்டது.  அதை தள்ளவே சிலர் என் காரில் எப்போதும் இருப்பார்கள். பார்வைக்கு நண்பர்களோடு திரிவதாகவே தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. 
இப்படியான நேரத்தில்தான் ஒரு ஹிந்தி திரைப்பட ஒளிப்திவுக்காக , நண்பரின் இடத்துக்காக  உதவி செய்யப்  போன போது நான் ஶ்ரீதேவியை முதன் முதலாக சந்தித்தேன். 
அழகாகவும் உயரமாகவும் இருந்த அவரை பார்த்ததும் வியந்து போனேன். சினிமாவில் அவரை உயரமாக இருப்பார் என எனக்கு தெரியவில்லை. நான் பொதுவாக நெருங்கம் இல்லாத நடிக - நடிகையோரோடு பேசப் போவதில்லை. பழகினால் மட்டும் நெருங்கிவிடுவேன். 
  எனது நண்பர்கள் என்னை சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பதாகவே ஶ்ரீதேவியிடம் முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்கள். 
 நான் இலங்கையில் பிறந்தாலும்,உண்மையாகவே சிங்கப்பூரில் இருந்தே இந்தியா வந்திருந்தேன். சிங்கப்பூரில் வளர்ந்ததால், எனது தமிழ் கூட சிங்கப்பூர் தமிழாகவே இருக்கும். அப்போதெல்லாம் இலங்கை தமிழ் எனக்கு பெரிதாக வராது. தமிழகத்தோடு நெருங்க அது எனக்கு  இலகுவாக இருந்தது.
ஏனோ ஶ்ரீதேவி பார்த்த மாத்திரத்திலேயே, என்னோடு மிக அன்போடு பழகத் தொடங்கினார். அவர் சாப்பிடும் போதெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு சாப்பிடவும் தொடங்கினார். சில உணவுகளை வீட்டிலிருந்து கொண்டு வந்து பரிமாறினார். இந்த உறவு 3 நாட்களே நீடித்தது. 3வது நாள் ஜெயப்பிரதாவும் அந்த படத்தில் நடிக்க வந்தார். அதோடு காற்று மாறியது.
எனக்கு ஏற்கனவே ஜெயப்பிரதாவை தெரியும். ஜெயப்பிரதாவை திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தெலுங்கு இயக்குனர் வாசு காரு அவர்கள். வாசு காருவின் தம்பியும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள். அதனால் நான் ஜெயப்பிரதா வீட்டுக்கெல்லாம் பல முறை போய் வந்துள்ளேன். 3வது நாள் சூட்டிங் வந்த ஜெயப்பிரதா, என்னைக் கண்டதும் ஓடி வந்து பேசினார்.  
வழமை போல நான் ஶ்ரீதேவியோடு சாப்பிட போக முயன்ற போது ஜெயப்பிரதா முகத்தில் கடுப்பு தெரிந்தது.  நான் நாளைக்கு உங்க கூட சாப்பிட வர்ரேன் என்று சொல்லி விட்டு ஶ்ரீதேவியோடு சாப்பிட போனேன்.
 ஶ்ரீதேவி இருந்த இடத்துக்கு போனதும் , ஜெயப்பிரதாவை முன்னமே உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டார். நான் விபரத்தை சொன்ன போது , அவரது கண்களில் கோபத்தை உணர முடிந்தது. அடுத்த நாள் முதல் ஶ்ரீதேவி என்னோடு முன்பு போல பேசவில்லை. 
நான் இருந்த அடுத்த நான்கு நாளும் ஜெயப்பிரதாவோடு அதிகம் பேசிப் பழகினேன். அவரை அதிகம் தெரிந்ததால் அதில் வித்தியாசம் தெரியவில்லை. ஜெயப்பிரதா , மென்மையான போக்குள்ளவர். பொதுவாக நான் ஜெயப்பிரதா வீட்டுக்கு போய் வந்து பழக்கப்பட்டவன். அதனால் அவர் எனது குடும்ப உறவில் ஒருவரை போன்றவர்.
கடைசி நாள் நான் அங்கிருந்து கிளம்பும் போது,  ஶ்ரீதேவியிடம் நாளைக்கு வர மாட்டேன்  என  விடை பெற்றேன். "எப்ப வேணுமானாலும் வீட்டுக்கு வாங்க" என்று தொலைபேசி எண்ணை தந்தார். ஆனால் நான் போகவே இல்லை.  அவர்,  படம் முழுவதும் நான் வேலை செய்வேன் என நினைத்திருக்கலாம். அவரை காணும் வாய்ப்பு அதோடு முடிந்து போனது.
   ஆனால் அவர் மறைந்த செய்தி தெரிந்த போது அந்த பழைய நாட்களின் நினைவுகள், என் இதயத்தை வலிக்கவே வைத்தது. ஒரு நடிகையை தாண்டிய நட்பாக.......!                                                                                           
அந்த சூட்டில்  ஶ்ரீதேவி , ஜெயப்பிரதாவோடு இணைந்து நடித்தாலும் கட் என்றதும் ஜெயப்பிரதாவோடு பேசாமல் தனியாக போய் உட்கார்ந்து விடுவார். ஆனால் டேக்கில் இருவரும் இணைந்து சோவியலாக நடிப்பார்கள். மறுபடியும் தனியாகிடுவார்கள். வாழ்வே நடிப்புதான்.
 இந்தியாவை விட்டு வெளியேறியதனால் பலரது தொடர்புகள் இல்லாமல் போய் விட்டன. இருந்தாலும் நட்பின் நினைவுகள் மறையாமலே இருக்கின்றன. அதுவும் பழகிய ஒருவரை இழக்கும் போது, அவர்தம் நினைவுகள் கண்களில் வேதனையை  மீறி கொண்டு வருகிறது. 
ஶ்ரீதேவி பரிமாறிய  சாம்பார் சாதம்,  காட்சியாக கண்ணுக்குள் வந்து போகிறது. கண்ணீர் துளிகள் ....
 

 

Leave a Reply