• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை,  லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலான இயற்கை விவசாயத் திட்டம் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தொலைநோக்குப் பார்வையிலான வழிகாட்டலில் இந்த இயற்கை விவசாய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதன் ஊடாக ஆரோக்கியமான வாழ்வு மற்றும் சுழலை பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில், பல  ஏக்கரில் மிளகாய் செய்கை முதற் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் காணியும் பெறப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தின் மூலம் பச்சைமிளகாய் பயிரிட தெரிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான  விவசாயிகளுக்கு தலா ½ ஏக்கர் அளவில் இந்த நிலம் பிரித்து வழங்கப்படவுள்ளது.

இதற்காக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், விவசாய செய்கைக்கான அனைத்து முலக்கூறுகள் மற்றும் தேவைகளும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையால் பூர்த்தி செய்து வழங்கப்படவுள்ளன.

மேலும், ஞானம் அறக்கட்டளையின் விவசாயக் குழுவானது உள்ளூர் சிறப்புச் சந்தைகளுடன் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பச்சை மிளகாயை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளையும் தற்போது ஆரம்பித்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலையில், இதில் ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர், கிராம சேவையாளர், ஞானம் அறக்கட்டளை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு, மட்டக்களப்பில் அடுத்த மாதம் வீட்டுத்தோட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாய முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தவும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

இயற்கை விவசாயத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் நீடித்த வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்காக ஞானம் அறக்கட்டளையானது, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.
 

Leave a Reply