• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகிஸ்தானுக்குள் ஈரான் ராணுவம் நுழைந்து மீண்டும் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பஞ்ச்கூர் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ்-அல் அட்லி பயங்கரவாத இயக்கம் மீது ஈரான் ராணுவம் கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அமைதி திரும்பியது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்குள் ஈரான் ராணுவம் புகுந்து மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

இது தொடர்பாக ஈரான் அரசின் ஊடகத்தை மேற் கோள்காட்டி ஈரான் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறும் போது, ஈரானின் ராணுவ படைகள் பாகிஸ்தான் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்-அல்-அட்லி இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபஷ், மற்றும் சிலரை கொன்றுள்ளது.

பயங்கரவாதிகளுடன் நடந்த ஆயுத மோதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஈரான்-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-அல்-அட்லி இயக்கம் அடிக்கடி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் ஈரான் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த இயக்கத்தை பயங்கரவாத குழுவாக ஈரான் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply