• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாதனை - 16 மணி நேரம் மரத்தை கட்டியணைத்தபடி நின்றார்

சினிமா

மனிதர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவர்கள் இயற்கை வளங்களை சுரண்டுதலும் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி, நீண்ட காலமாக, சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் வனங்கள், மண், மரம், கனிமம், மலை, நதிநீர், காற்று மண்டலம் உள்ளிட்டவைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் போராடி வருகிறார்கள்.

தனிநபர் பயன்பாடு மட்டுமின்றி, சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் பொது பயன்பாட்டிற்காக கட்டிடங்களை நிர்மாணித்தல் போன்ற காரணங்களுக்காக நீண்ட காலமாக வேரூன்றிய மரங்கள் கூட அப்புறப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில், தலைநகர் கம்பாலா நகரில், 29 வயதான, ஃபெயித் பேட்ரீசியா அரியோகோட் (Faith Patricia Ariokot), எனும் சுற்றுச் சூழல் ஆர்வலர், மரங்களை வெட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய சாதனை புரிந்துள்ளார்.

வனங்களை அழிப்பதை நிறுத்தவும், புதிதாக பல மரங்களை நடுவதை ஊக்குவிக்கவும், உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெரிய மரத்தின் தண்டு பகுதியை பேட்ரீசியா 16 மணி நேரம் 6 நொடிகள் தொடர்ந்து கட்டியணைத்தபடி நின்று கின்னஸ் உலக சாதனை புரிந்தார்.

தனது சாதனை குறித்து கூறும் போது பேட்ரீசியா தெரிவித்ததாவது:

இந்த சாதனைக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுப்பது திருமண உடையை தேர்ந்தெடுப்பதை போன்ற அனுபவமாக இருந்தது.

நான் கட்டியணைத்தபடி நின்ற மரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை; அதுதான் என்னை தேர்ந்தெடுத்ததாக உணர்கிறேன்.

அந்த மரத்தை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்து விட்டது.

மரங்களை காக்க வேண்டியது மனிதர்களின் கடமை. மரங்கள்தான் பருவநிலை மாற்றங்களை தடுத்து சீரான தட்பவெட்பம் உலகெங்கும் உள்ள மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றன.

இந்த முயற்சியில் எனது கால்கள் வலியாலேயே என்னை கொல்வது போல் இருந்தது.

மரத்தின் கரடுமுரடான பகுதிகளில் கைகளை அழுத்தி கொண்டிருந்ததால் கைகளும் மிகவும் வலியை தந்தன.

இருந்தும் நான் மன உறுதியுடன் கட்டியணைத்தபடி இருந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சாதனை முயற்சியின் போது பேட்ரீசியா, மரத்திலிருந்து தனது கரங்களை எந்த நிலையிலும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் சாதனை முயற்சிக்கான நேரம் முழுவதும் நின்றபடியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்ரீசியா முன்னர் இரு முறை இதே சாதனைக்கு முயற்சி செய்தார்.

முதல் முறை அவரது முயற்சியை கேமிராவால் முழுவதுமாக பதிவு செய்ய முடியாமல் போனது.

இரண்டாம் முறை புயல், மழை காரணமாக அவர் பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

Leave a Reply