• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

இலங்கை

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது. 

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையிலான இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

யாழ். குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்கள், ஐயாயிரம் பேர் வசிக்கின்றனர். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நயினாதீவு மக்களின் பிரதான ஜீவனோபாயமாக கடற்தொழில் காணப்படுகிறது. 

இக்கலந்துரையாடலின்போது, நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து  கிராம மக்களால் எடுத்துரைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்ட வரைபை சமர்ப்பிக்குமாறும், நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மேலும் கூறுகையில், இயற்கை வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இன, மத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இந்த கிராமத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான சிறந்த ஆரம்பம் என்றார். 

மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர், நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர்  கலத்துகொண்டனர். 

இதேவேளை தீவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மதத் தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது ஆளுநரின் பணிப்புரைக்கமைய, ‍வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நயினாதீவை முன்மாதிரி தீவாக மாற்றுவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பித்து, அதற்குரிய திட்ட வரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் நயினாதீவு மக்களுக்கு உறுதிபட தெரிவித்தார்.
 

Leave a Reply